Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சுறுசுறுப்பு

Print PDF

தினகரன்            21.08.2013

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சுறுசுறுப்பு

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 26 பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. திறந்தவெளியில் குப்பை வீசினால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணற்ற வளங்களை மனித குலத்துக்கு அள்ளிக்கொடுத்த பூமியானது தன்னிடம் சேரும் குப்பைகளால் பெரும் ஆபத்தை சந்தித்துக்கொண்டு உள்ளது. மக்காத குப்பைகளால் மண் மலடாவது மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து அதிகரித்து வருகிறது. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருகின்றன. குப்பைகளால் உருவாகும் ஆபத்தை உணர்ந்த அரசு, திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் தினந்தோறும் சராசரியாக 50 டன் அளவுக்கும் அதிகமாக குப்பைகள் சேருகிறது. இந்த 16 பேரூராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தக்கோலம், பனப்பாக்கம் பேரூராட்சிகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம் பேரூராட்சியிலும் அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.உதயேந்திரம், அம்மூர், திமிரி, காவேரிப்பாக்கம், திருவலம், விளாப்பாக்கம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, நாட்ரம்பள்ளி, ஒடுகத்தூர், கலவை, ஆலங்காயம், செங்கம், கீழ்பென்னாத்தூர், கண்ணமங்கலம், போளூர், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் 6 முதல் 10 வார்டுகள் வரை திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து பேரூராட்சிகளிலும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளுக்கு நேரில் சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியே சேகரிக்கின்றனர்.குப்பைகளை சேகரிக்க பெரிய உணவு விடுதிக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், ஓட்டல்கள், திரையரங்குகளுக்கு ரூ.500, டீக்கடை, இறைச்சிக்கடை, காய்கறி மொத்த விற்பனை கடை ஆகியவற்றுக்கு மாதம் ரூ.250, தள்ளுவண்டி கடைகள், இரவு கடைகளுக்கு மாதம் ரூ.100, திருமண மண்டபங்களுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூ.250, பெரிய மரங்கள், உபயோகமற்ற கீற்று மற்றும் இதர கழிவுகளுக்கு லாரி ஒன்றுக்கு ரூ.250 வீதம் வசூலிக்கப்படுகிறது.சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தரம் பிரிக்கப்படுகிறது. பாட்டில்கள், அட்டைகள், பிளாஸ்டிக், இரும்பு என 28 விதமான குப்பைகள் தனித்தனியே பிரித்து எடுக்கப்படுகிறது.

இவ்வாறு பிரிக்கப்படுவதில் 90 சதவீத குப்பைகள் மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிக்க தகுந்தவையாக உள்ளன. 10 சதவீதம் குப்பைகள் மட்டுமே எதற்கும் உதவாத குப்பையாக எஞ்சியிருக்கிறது. குப்பையில் இருந்து தரம்பிரித்து எடுக்கப்பட்ட பொருட்களை தனியார் பலர் நேரில் வந்து விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். குப்பைகளை திறந்தவெளியில் வீசாமல் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதை மீறினால் அபராதம் விதிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் வீசப்படுகிறது. கடலில் நிலவும் குளிர், வெப்பம், உப்பு காரணமாக பிளாஸ்டிக் சிதைகிறது. இதனால் நச்சுப்பொருட்கள் கடல்நீரில் கலந்து எல்லா உயிரினங்களையும் தாக்குகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.