Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாசில்லா மதுரை! மாநகராட்சி மக்கள் வியாபாரிகள் இனைந்து செயல்படவேண்டும்

Print PDF
தினமலர்              27.08.2013

மாசில்லா மதுரை! மாநகராட்சி மக்கள் வியாபாரிகள் இனைந்து செயல்படவேண்டும்


ஜூலி மார்க்கோ, பைபாஸ் ரோடு: மதுரை மாநகர் முழுவதும் பார்க்கும் இடமெல்லாம் குப்பை. மாநகராட்சி, மக்கள், வியாபாரிகள் இம் மூன்று கரங்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முழுமையாக குப்பைகளை அகற்றுவது சாத்தியம்.

மாநகராட்சி: மக்கும்,மக்காத குப்பைகளை பிரித்தெடுப்தோடு, உலோக கழிவு, பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு பொருட்களையும் பிரித்தெடுக்க வேண்டும். சுத்தம் செய்யும் ஊழியர்களும் மனிதர்கள் தான். நோய் தொற்று ஏற்படாமலிருக்க கை,கால் உறைகள் வழங்கி அவற்றை பயன்படுத்த சொல்ல வேண்டும். பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதித்தால், மக்களும் பொறுப்புணர்வுடன் இருப்பார்கள். பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்து கழிவுநீர் தேங்காமல் தடையின்றி செல்லவும் பராமரிப்பு பணிகளை அவ்வப்போது செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

பொது மக்கள்: உணவு,உடை என வெளிநாட்டு பழக்கங்களை கடைபிடிக்கும் நாம், சுகாதாரமாக இருக்க ஏன் வெளிநாட்டை பின்பற்றுவதில்லை. அரசையும், மாநகராட்சியையும் குறை சொல்லாமல், நம் வீட்டில் சேகரிக்கும் குப்பைகளை பயனுள்ளதாக மாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். சுத்தம் சோறு போடும் என்று தெரியாமலா சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

வியாபாரிகள்: குப்பைகளை, கடையின் முன் அப்படியே போடுவதை முதலில் நிறத்த வேண்டும். கடைக்காரர்களே இப்படி செய்தால், வாடிக்கையாளர்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படும். மார்க்கெட் பகுதிகளில் தினமும் விட்டு செல்லும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. தினமும் காய்கறிகள் குப்பைகளை ஓர் இடத்தில் மொத்தமாக சேர்த்து வைத்து, குப்பை வண்டிகள் வரும் போது கொடுக்க வேண்டும்.

தலைமுடியும் உரம் தான்

தலைமுடியில் அமினோ அமிலம் இருக்கிறது. தலைசீவும் போது, உதிரும் முடிகளை அப்படியே கண்ட இடங்களில் போடாமல், சேகரித்து வைக்க வேண்டும். முடிகளை கத்தரியால் சிறுசிறு துண்டாக வெட்டி, இதனுடன் தேங்காய் நார், மண், சாணம், நுண்ணுயிரி கலந்து வைக்க வேண்டும். இந்த உரத்தில் ரோஜாச் செடிகள் நன்கு பூக்கும். இதைவிட முக்கிய விஷயம். நரைத்த தலைமுடியில் கறுப்பை விட, அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. சீனாவில், நெல்லுக்கே அடியுரமாக தலைமுடியைத் தான் பயன்படுத்துகின்றனர்.

மக்கும் குப்பை எது?

இலை, தழை, காய்கறி கழிவுகள், பசுஞ்சாணம், ஆட்டுப்புழுக்கை, அனைத்தும் உரமாய் மட்கிவிடும். இதனால் பூமிக்கு கெடுதல் இல்லை. நன்மை தான். காகித இலை மண்ணில் அதிகம் சேர்ந்தால் மண் நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும். பாலிதீன் தேங் கினால், நிலத்துக்குள்ளே தண்ணீர் செல்ல வழியில்லாமல் போய்விடும்.

தூய்மை பணியின் நிலவரம்

ஜான்விக்டர், பிஸியோதெரபிஸ்ட்: குப்பைகளை மாநகராட்சிதான் அகற்ற வேண்டுமா? நாமும் முன்வந்து ஒன்றாக சேர்ந்து சுத்தம் செய்யலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில், நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளை ரோட்டில் "வாக்கிங்' அழைத்து செல்லும் போது, அவற்றின் கழிவுகளை கூட நாமே தான் எடுத்து தொட்டிகளில் போட வேண்டும். அதற்காகவே சாலையோரங்களில் குப்பை தொட்டியும், கை உறையும் வைக்கப்பட்டிருக்கும். இதை போல குப்பைகளை தாங்களே முன்வந்து சுத்தம் செய்யும் விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும். நம் வீட்டை சுத்தமாக வைத்து கொண்டால் தான் தெரு, ஊர், நகரம் என படிப்படியாக சுத்தமாகும்.

சுற்றுபுறம் சுத்தமாக செலவு செய்யுங்கள்

கண்ணன், விற்பனை பிரதிநிதி, ஆத்திக்குளம்: குப்பைகளை பெற தினமும் துப்புரவு தொழிலாளர்கள் வந்தாலும், தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில், துப்புரவு தொழிலாளர்கள் பணம் கேட்பார்கள் என குப்பைகள் கொடுப்பதை தவிர்த்து விடுகின்றனர். எவ்வளவோ செலவு செய்கிறோம், நம் வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள ஆண்டிற்கு சிறிதளவு பணம் செலவு செய்யலாமே. எந்த ஒரு பொருளையும் பயன்படுத்திவிட்டு, கண்ட இடத்தில் தூக்கி வீசிவதும் தவறு. குப்பை தொட்டிகள் இல்லையென்றால், அவை இருக்கும் இடத்தை சிரமப்படாமல் தேடி சென்று போடலாம். ஈர தன்மையுள்ள கழிவுகளை மொத்தமாக தொட்டியில் போடுவதால், அது மேலும் மக்கி துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதனால் வீடு தேடி வரும் குப்பை வண்டிகளில் குப்பைகளை கொடுப்பதே சிறந்த வழி.

மண் வளத்தை பாழாக்கும் பாலிதீன்

மக்கும் குப்பைகளை உரமாக மாற்றலாம். ஆனால், மக்காத பாலிதீன் குப்பைகளை அழிப்பது கடினம். ரெடியூஸ், ரீயூஸ், ரீசைக்கிள் என்ற மூன்று முறைகளில் பாலிதீன் பயன்பாட்டை குறைக்கலாம் என்கிறார், தியாகராஜர் கல்லூரி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் அருள் நாகேந்திரன். அவர் கூறியது: ஒரு முறை பயன்படுத்திய பாலிதீன் பைகளை வீசி எறியாமல், மீண்டும் பயன்படுத்தலாம. நாகரிகம் கருதி, பாலிதீன் பைகளை பயன்படுத்துபவர்கள், மண்வளம் கருதி துணி பைகளை பயன்படுத்தினால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும். பிளாஸ்டிக் கப்புகளின் பயன்பாடு குறைந்து, தற்போது பேப்பர் கப்புகளை பயன்படுத்தி வருகிறோம். உள்ளே மெழுகு கோட்டிங் பூசியுள்ளதால், உடலுக்கும், சுற்றுப்புறத்திற்கும் பேப்பர் கப்புகளும் எதிரி தான்.
 
மும்பை, புனே, சண்டிகாரில் அடுக்குமாடி வீடுகள், மருத்துவமனைகளில் கழிவுநீர், குப்பை சுத்திகரிப்பு வசதிகள் உள்ளதை போல, மதுரையிலும் கட்டடங்கள் கட்டும் போதே இவ்வசதியும் சேர்க்க வேண்டும். குப்பைகளை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.