Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து மறுசுழற்சி

Print PDF

தினமணி            26.09.2013 

பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து மறுசுழற்சி

கோவை மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்ய மாநகராட்சி நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

  கோவை மாநகராட்சிக்கென சொந்தமாக துடியலூர் பகுதியில் பிளாஸ்டிக் அரவை இயந்திரத் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது. மகளிர் சுய உதவிக் குழுவினர் இந்த ஆலையை இயக்கி வந்தனர். பல்வேறு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழுவினரால் இதைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இயந்திரத்தை இயக்கி வந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் இப்போது வேறு தொழிலில் கவனம் செலுத்துகின்றனர்.

  இச் சூழ்நிலையில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக கோவை மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் தினமும் சேரும் சுமார் 850 டன் குப்பையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்களும் உள்ளன.

 இக் குப்பையைத் தரம் பிரித்து அதில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, கோவை மாநகராட்சிப் பகுதியில் மொத்தமுள்ள 5 மண்டலங்களிலும் தலா ஒரு வார்டு வீதம் சோதனை முயற்சியாக அந்தந்த வார்டுகளில் சேரும் குப்பையில் பிளாஸ்டிக்கைத் தரம் பிரிக்கும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  அந்தந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கும் பணியிலும் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெனத் தனியாக பைகள் தரப்பட்டுள்ளன. இப் பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் அந்தந்த மண்டல அலுவலகங்களில் வைக்கப்பட்டு துடியலூரில் உள்ள பிளாஸ்டிக் அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட உள்ளன.

 ஒவ்வொரு வார்டிலும் தினமும் சுமார் 75 முதல் 100 கிலோ வரை பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன. இவை துடியலூருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இயந்திரத்தில் அரைக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

பிளாஸ்டிக் மறுசுழற்சி அரவை இயந்திரம் இடையில் சில ஆண்டுகள் இயக்கப்படவில்லை. இதனால், இப்போது மீண்டும் அந்த இயந்திரம் சரி செய்யப்பட உள்ளது. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களை எடை போடுவதற்காக 6 புதிய இயந்திரங்களும் வாங்கப்பட உள்ளன.

  வீடு வீடாக பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு அது மறுசுழற்சி செய்யப்படும். மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும். மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்கும் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட உள்ளது.

  இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் க.லதா கூறியது:

 துடியலூரில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி அரவை இயந்திரத்தை மீண்டும் செயல்பாடுக்கு கொண்டு வருவதன் மூலமாக பலருக்குக் கூடுதலாக வேலைவாய்ப்புக் கிடைக்கும். மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டையும் குறைக்க முடியும். துவக்கத்தில் மாநகராட்சியின் வடக்கு மண்டலப் பகுதியில் மட்டும் செயல்படுத்தப்படும் இத் திட்டம், விரைவில் மாநகராட்சிப் பகுதி முழுவதும் செயல்படுத்தப்படும் என்றார்.