Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையை குப்பையில்லாத நகரமாக மாற்றும் திட்டம் தொடக்கம் சணல்பைகளை வீடு,வீடாக வழங்கி குப்பைகளை சேகரிக்க முடிவு

Print PDF

தினத்தந்தி           03.10.2013

கோவையை குப்பையில்லாத நகரமாக மாற்றும் திட்டம் தொடக்கம் சணல்பைகளை வீடு,வீடாக வழங்கி குப்பைகளை சேகரிக்க முடிவு

கோவையை குப்பையில்லாத நகரமாக மாற்றும் திட்டத்தை மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார். இத்துடன் வீடுவீடாக சணல் பைகளை வழங்கி மக்கும், குப்பை மக்காத குப்பையை தரம்பிரித்து வாங்கும் பணியும் தொடங்கப்பட்டது.

தினமும் 750 டன் குப்பை

கோவை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 750 டன் குப்பைகள் சேருகிறது. இதில் 3 முதல் 4 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும். மேலும் பொது இடங்களில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகளை தடுத்திடவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கோவை மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் இணைந்து, காந்தி பிறந்தநாளான நேற்று ‘சூன்யா’ என்ற இந்த திட்டம்(பூஜ்ய கழிவு மேலாண்மை) தொடங்கப்பட்டது. கோவையில் முதல்கட்டமாக 23–வது வார்டு முன் மாதிரியாக தேர்வு செய்யப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தையொட்டி வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணியை ஆர்.எஸ்.புரம் பாஷியாரலு வீதியில் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்து புதிய திட்டம் குறித்து கூறியதாவது:–

ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சியில் முதல்கட்டமாக 23–வது வார்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டில் உள்ள 500 வீடுகளுக்கு சணல் பைகள் வழங்கப்பட்டு அவர்களது வீட்டு குப்பைகளை வெளியில் கொட்டாமல் முழுமையாக சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியாக வாங்கப்படும். சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் உடனடியாக துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும். இங்கு சேகரிக்கப்படும் அனைத்து மக்காத பொருட்களும் தனியார் நிறுவனம் மூலம் குறிப்பிட்ட விலைக்கு வாங்கப்பட்டு, அந்த தொகையிலிருந்து துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்கட்டமாக 23–வது வார்டில் தொடங்கப்பட்டாலும் இத்திட்டம் படிப்படியாக அனைத்து வார்டுகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு, கோவை மாநகராட்சியை குப்பையில்லா முதன்மை நகரமாக்கிட முதல்–அமைச்சரின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

குப்பைகள் தரம் பிரிப்பு இந்ததிட்டத்தின் படி சமைத்த உணவுகள், உணவுக்கழிவுகள், பழங்கள், மற்றும் பூ, உதிர்ந்த இலைகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகள் தனியாகவும், காகிதங்கள், பிளாஸ்டிக், மரவகைகள், உலோகங்கள், துணிகள், கண்ணாடி, கம்பிகள், தோல்பொருட்கள், அட்டைபெட்டி, பாலித்தின் பைகள், தண்ணீர் பாட்டில்கள், பால் கவர்கள் போன்றவை வீடு,வீடாக சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின்படி, கடந்த மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க பச்சை மற்றும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கூடைகள் வீடு,வீடாக இலவசமாக வழங்கப்பட்டது. அந்த திட்டம் முழுமை அடையவில்லை. தற்போது சணல் பைகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்ட தொடக்க விழாவில் துணை மேயர் திருமதி லீலாவதி உண்ணி, துணை கமிஷனர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் சாவித்திரி, ஆதிநாராயணன், கே.ஆர்.ஜெயராமன், பெருமாள்சாமி, மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர்கள் செந்தில்குமார், தாமரைச்செல்வி, பிரபாகரன், சாந்தாமணி, அர்ச்சுணன், கணேசன், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் மணிமேகலை, ரங்கராஜ், மயில்சாமி, வெண்தாமரை பாலு மற்றும் பி.கே.சீனிவாஸ், நகர் நல அதிகாரி பி.அருணா, ஐடிசி நிறுவன மேலாளர் பெரோஸ் முன்ஸீ, உதவி கமிஷனர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.