Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் செட்டிபாளையம் பொதுமக்கள்

Print PDF

தினமலர்             03.10.2013

பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் செட்டிபாளையம் பொதுமக்கள்

திருப்பூர் :திருப்பூரில், பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் பொதுமக்கள் நேற்று களமிறங்கினர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், 100 கிலோ பிளாஸ்டிக் சேகரித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 550 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 300 டன் வரை பிளாஸ்டிக் கழிவாக இருக்கிறது. குப்பை கிடங்கு மட்டுமன்றி, ரோடு, சாக்கடை கால்வாய், விவசாய நிலங்கள் என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவு பரவியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தும் வகையில், பசுமை நண்பர்கள் அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணி நேற்று துவங்கியது. இதற்கான துவக்க விழா, கே.செட்டிபாளையம் பள்ளியில் நடந்தது. பசுமை நண்பர்கள் அமைப்பு தலைவர் பாபு தலைமை வகித்தார். 36வது வார்டு கவுன்சிலர் பேபி தேசியக்கொடி ஏற்றினார். காந்தி படத்துக்கு, தர்மலிங்கம், மணி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, அனைவரும் ஆர்வமாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர். கே.செட்டிபாளையம் முதல், விவேகானந்தா பள்ளி வரை, ஒரு கிலோ மீட்டர் தூரம், ரோட்டின் இருபுறமும் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கி எடுத்தனர்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 50 மூட்டைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், 100 கிலோ இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரதான ரோட்டிலேயே இவ்வளவு பிளாஸ்டிக் கழிவு இருந்தால், குடியிருப்பு பகுதிகள், குப்பை தேங்கும் இடங்களில் இன்னும் அதிகளவு இருக்க வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக, கே.செட்டிபாளையத்தில் இப்பணி துவங்கியுள்ளது. இதேபோல், மாதத்துக்கு ஒரு முறை, ஏதாவது ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணி நடத்தப்படும் என பசுமை நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.