Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை மறுசுழற்சி திட்டம் என்ன ஆனது?

Print PDF

தினமணி 19.11.2009

குப்பை மறுசுழற்சி திட்டம் என்ன ஆனது?

புதுச்சேரி, நவ. 18: நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 50 கோடியில் குப்பை மறுசுழற்சி செய்யும் திட்டம் என்ன ஆனது என்று அரசிடம் எம்எல்ஏ விஸ்வநாதன் வினா எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை கூறியது: புதுச்சேரி காங்கிரஸ் அரசு, சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் புதுச்சேரியைச் சிங்கப்பூராக மாற்றுவோம் என்று கூறினர். ஆனால் புதுச்சேரியில் இன்று மலைபோல் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் அரசுதான் பதில் கூற வேண்டும்.

புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி மூலம் தினசரி 450 டன் குப்பை சேகரமாகிறது. குப்பையை மறுசுழற்சி முறையில் திடக்கழிவு மேலாண்மை செய்திட அமைச்சர்கள் ஹைதராபாத், அமெரிக்கா போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர். ஆனால் இத் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

நான் அமைச்சராக இருந்தபோது சேதராப்பட்டு கரசூரில் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினேன். இதன் மூலம் ரூ.10 என்ற விலையில் இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்தோம். இத் திட்டத்தைப் பாராட்டி அப்போதைய வேளாண் அமைச்சர் ரூ. 20 லட்சம் வழங்கினார். இத் திட்டம் இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை விரிவுபடுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் குப்பைகள் மறுசுழற்சி செய்ய ரூ.50 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு இருந்தது. இத் திட்டம் என்ன ஆனது? லாஸ்பேட்டையில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதைக் காட்டிலும் விமான நிலைய அதிகாரிகள்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குரும்பாபட்டில் குப்பை கொட்ட இடம் இல்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மீதான தடையைத் தடுத்தவர்கள் யார்? பிளாஸ்டிக் பொருள்களால் இன்று வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம் வந்து விட்டதாக மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி கூறினார். அது தவறு என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கும் நிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

Last Updated on Thursday, 19 November 2009 07:46