Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவுகளில் இருந்து தினமும் 30 மெகா வாட் மின் உற்பத்தி : புதிய திட்டம் குறித்து திருப்பூரில் செயல்விளக்கம்

Print PDF

தினமலர் 06.01.2010

திடக்கழிவுகளில் இருந்து தினமும் 30 மெகா வாட் மின் உற்பத்தி : புதிய திட்டம் குறித்து திருப்பூரில் செயல்விளக்கம்

திருப்பூர் : திருப்பூர் பகுதியில் சேகரமாகும் 1000 டன் திடக்கழிவுகளில் இருந்து தினமும் 30 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் நேற்று நடந்தது.திருப்பூர் ஜவுளி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்த மாதிரி செயல்விளக்க கருத்தரங்கு, ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்தது; மேயர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநகராட்சி சுற்றுப்பகுதிகளில் சேகரமாகும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல் மற்றும் சாயக்கழிவு நீரை மறுசுழற்சியில் சுத்திகரித்தல் குறித்தும் விளக்கப்பட்டது.அமெரிக்க டெக்ஸாஸ் ஏ.எம் பல்கலை பேராசிரியர்கள் சீனிவாசன், ஆலன் ஜோன்ஸ், "ஜீரோ இங்க்' நிறுவன ஸ்டீம் கிளர்க் ஆகியோர் அடங்கிய குழு இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

இதனடிப்படையில், திருப்பூரின் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டம், உத்தேச மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டுக்கு 87 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் தயாரிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

க்ஸாஸ் ஏ.எம் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் கூறியதாவது:

திட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும், அனைத்து வகையான திடக்கழிவுகள், பேப்பர்கள், மரக்கழிவு, கார் டயர்கள், பெட்ரோலிய கழிவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கழிவுகளையும் பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு ஆயிரம் டன் குப்பைகள் இருந்தால், 30 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 87 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கலாம்.மாநகராட்சி, நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சிகள், மாநகராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளில் தினமும் 900 டன் அளவுக்கு குப்பைகள் சேகரமாகின்றன. பல்லடம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி பகுதிகளிலும் சேகரித்தால், 1000 டன்னுக்கும் அதிகமாக கிடைக்கும். தற்போதைய திட்டப்படி, தினமும் 1,100 டன் கழிவுகள் தேவை. திருப்பூரில் இருந்து 25 கி.மீ., சுற்றளவுக்கு மின்வினியோகம் செய்யலாம்.எஞ்சியவற்றில் உரம், ஆக்ஸிஜன், கார்பன்- டை- ஆக்ஸைடு வாயுக்கள் உள்ளிட்டவையும் தயாரிக்க முடியும். திருப்பூர் பகுதியில் உள்ள 20 பொதுசுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, தினமும் 11 கோடி லிட்டர் அளவுக்கு சாயக்கழிவு நீர் வெளியேறுகிறது. மின்சாரம் தயாரிக்கும் போது, கழிவுநீரையும் 30 சதவீதம் என்ற தொடர் அடிப்படையில், சுத்திகரிப்பு செய்யலாம். இதனால், 11 கோடி லிட்டர் தண்ணீரில், 30 ஆயிரம் லிட்டர் மட்டுமே கழிவாக வெளியேறும். மீதி அனைத்தையும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும்.

திட்டத்தை துவக்க, 1,423 கோடி ரூபாய் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 90 சதவீதத்தை உலக வங்கியின் அங்கமான ஐ.எப்.சி.,யிடம் பெறலாம்; மீதி 10 சதவீதத்தை மட்டும் முதலீடு செய்தால் போதும். இத்திட்டத்துக்கு மாநகராட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.20 ஏக்கர் இடம் வழங்குவதோடு, தினமும் 1000 டன் அளவுக்கு கழிவுகளை வழங்குவதாகவும் கூறியுள்ளது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுடன், குப்பை பிரச்னை, சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு என, மூன்று வகையாக ஆதாயம் அடையலாம். திட்டத்தின் முதலீட்டு தொகையை, ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்குள் திரும்ப பெறலாம். இவ்வாறு, சீனிவாசன் தெரிவித்தார்.செயல்விளக்க கூட்டத்தில், திருப்பூருக்கான திட்ட பொறுப்பாளர் பத்மநாபன், முயற்சி அமைப்பு சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 06 January 2010 06:46