Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆயிரம் டன் குப்பையிலிருந்து 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம்

Print PDF

தினமணி 06.01.2010.

ஆயிரம் டன் குப்பையிலிருந்து 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம்

திருப்பூர், ஜன.5: திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சேகரிக்கும் 1,000 டன் குப்பையில் இருந்து தினமும் 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க பல்கலை. பேராசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பெருகி வரும் மக்கள் தொகையை அடுத்து திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் குப்பைகள், கழிவுநீர், மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தீர்வு காணமுடியாத தலைவலியாக இருந்து வருகின்றன.

இதற் கிடையில், அமெரிக்க நாட்டின் ஏஎல் பல்கலை. பேராசிரியர்கள் குழுவினர் குப்பைகள் இருந்து மின்சாரம் தயாரித்தல் குறித்து ஆய்வுகள் செய்துள்ளனர்.

இந்த ஆய்வைக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசன், சார்லஸ் ஏலென் ஜோன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை திருப்பூர் மாநகராட்சி மற்றும் தொழில் துறையினருக்கு இத்திட்டம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கூட்ட அரங்கில் நடந்த இக்கருத்தரங்கில் மேயர் க.செல்வராஜ், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் ஏ.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், தொழில்துறையினர் பலர் பங்கேற்றனர். கருத்தரங்கைத் தொடர்ந்து ஆய்வுக்குழு பேராசிரியர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தினமும் 1000 டன் மெகாவாட் குப்பையைக் கொண்டு 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். தவிர, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போதே கழிவு நீரையும் சுத்திகரிப்பு செய்ய முடியும்.

திருப்பூரில் நாளொன்றுக்கு 11 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அதை இத்திட்டம் மூலம் மறுசுழற்சி செய்து 30 ஆயிரம் லிட்டர் கழிவுநீராக குறைத்து வெளியேற்றலாம்.

இதனால் மாநகரின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், குப்பை, மின்தட்டுப்பாடு மற்றும் சாக்கடை கழிவுநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் நிரந்தரக் தீர்வு கிடைக்கும். இத்திட்டத்தை திருப்பூரில் செயல்படுத்த ரூ.1,400 கோடி உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருப்பூரில் புதன், வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் ஆய்வைத் தொடர்ந்து இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்றார்.

Last Updated on Wednesday, 06 January 2010 10:05