Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு மேலாண்மைக்கு ஒத்துழைப்பு அவசியம் : உள்ளாட்சிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் கருத்து

Print PDF

தினமலர் 03.02.2010

திடக்கழிவு மேலாண்மைக்கு ஒத்துழைப்பு அவசியம் : உள்ளாட்சிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் கருத்து

குன்னூர் : "ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த பேரூராட்சி, நகராட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்,' என கலந்தாய்வு கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு குறித்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் குன்னூர் விவேக் அரங்கில் நடத்தப்பட்டது. சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரவடிவேலு வரவேற்றார். குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவி லட்சுமி பேசுகையில், ""குன்னூர் ஊராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேற்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது; இருப்பினும், திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த முடியவில்லை. பல கிராமங்கள் சுகாதாரமற்ற நிலையில் தான் உள்ளன. குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க குப்பை வாகனங்கள் தேவைப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த பயிற்சிகள் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்,'' என்றார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் மதிவாகணன் பேசுகையில், ""கடந்த 2000ம் ஆண்டு மாநில அரசால் அறிமுகப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்ற 2003ம் ஆண்டு வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நீலகிரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழு அளவில் நடைமுறைக்கு வரவில்லை. ஊராட்சிகளில் இத்திட்டம் முழு அளவில் வெற்றியடைய பேரூராட்சி, நகராட்சிகளின் உதவி அவசியம்,'" என்றார்.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட தொழில்நுட்ப குழு உறுப்பினர் பொறியாளர் பாஸ்கரன் பேசுகையில், ""ஊராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருகேயுள்ள நகராட்சி, பேரூராட்சிகள் மூலம் அப்புறப்படுத்துவன் மூலமே ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழு வெற்றி பெறும்,'' என்றார். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் இணை இயக்குனர் சுதாகரன் பேசுகையில், "ஊராட்சிகளுக்கு தேவையான குப்பை வண்டி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் ஊராட்சிகளில் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்,'' என்றார். கோவை வேளாண்மை பல்கலைகழக பேராசிரியை சுகந்தி, குப்பைகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் விதம் குறித்து விளக்கினார்.கூட்டத்தில், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பி.டி.., ராஜூ முன்னிலை வகித்தார். பர்லியார் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன், வண்டிச்சோலை ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், குன்னூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் காளிதாஸ் மற்றும் உறுப்பினர்கள், பேரட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, மேலூர் ஊராட்சி தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்ட ஏற்பாடுகளை "நெஸ்ட்' அறக்கட்டளையின் நிர்வாகி சிவதாஸ் உட்பட பலர் செய்திருந்தனர்.

ஆர்வம் குறைவால் அதிருப்தி...: உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த முக்கியமான கூட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. காலை 10.00 மணிக்கு கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது; வண்டிச்சோலை ஊராட்சி, பர்லியார் ஊராட்சி உட்பட சில ஊராட்சி தலைவர்கள் மட்டும் வந்திருந்தனர். மதியம் 12.00 மணிக்கு மேல் தான் சில உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வந்தனர். குன்னூர் நகராட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் எவரும் பங்கெடுக்கவில்லை. இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சோர்வடைய செய்தது.

Last Updated on Wednesday, 03 February 2010 07:47