Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் பரிசாக தங்கம்: மறைமலைநகர் நகராட்சி புதுமை திட்டம்

Print PDF

தினமலர்      14.08.2012

பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் பரிசாக தங்கம்: மறைமலைநகர் நகராட்சி புதுமை திட்டம்

மறைமலைநகர்:பிளாஸ்டிக் கழிவால் ஏற்படும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப் படுத்துவதற்காக, "பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால் நான்கு கிராம் தங்க நாணயம் பரிசு,' என்ற புதுமையான திட்டத்தை மறைமலைநகர் நகராட்சி அறிவித்து உள்ளது.

இங்கு, தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து, தினமும் 42 டன் குப்பை சேகரமாகிறது. இதில், பெரும் பங்கு பிளாஸ்டிக் உள்ளது.நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. எட்டு வார்டுகளில் நகராட்சி நிர்வாகமும், 13 வார்டுகளில் தனியார் நிறுவனமும் குப்பையை அகற்றி வருகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை, சித்தமனூர் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒதுக்கப் பட்டு உள்ள 5.56 ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டப் பட்டு, தரம் பிரிக்கப் படுகிறது.

புதிய திட்டம்:பிளாஸ்டிக் கழிவால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படுவதால், நகராட்சியில் உள்ள வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும், நகரின் பிரதான சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்திலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் பங்களிப்புடன் இப்பிரச்னைக்கு தீர்வு காண புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி தலைவர் கோபிகண்ணன் கூறுகையில்,"நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிற போதிலும், அவைகளை முமுமையாக ஒழிப்பது சிரமமாக உள்ளது,'' என்றார்,

தங்க நாணயம்:மேலும், ""தற்போது, பொதுமக்களின் பங்களிப்புடன் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க, புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, பொதுமக்கள் தினசரி பயன்படுத்தி, வெளியில் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்தால், 500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நான்கு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும். சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது,' என்று கூறினார்.

வரவேற்பு:சுற்றுச்சூழல் ஆர்வலர் தேவராஜன் கூறுகையில்,"இத்திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்றாகும். பிளாஸ்டிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டாமல் சேகரித்து, நகராட்சியிடம் வழங்கினால், அதை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். சுற்றுச் சூழலும் மாசடையாமல் தவிர்க்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், பொதுமக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே முழுமையாக செயல்படுத்த முடியும்,' என்றார்.

காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த மகளிர் குழுவினர் கூறுகையில்,"இத்திட்டம் வரவேற்க கூடிய ஒன்றுதான். ஆனால், வீடுகளில் 500கிலோ வரை பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது என்பது முடியாத ஒன்றாகும். எனவே, நூறு கிலோ, இருநூறு கிலோ என பரிசுகளை பிரித்து வழங்கினால், ஊக்கமாக சேகரிக்க வசதியாக அமையும்,' என்றனர்.

அங்கே அபராதம்! இங்கே பரிசு!குப்பையே இல்லா பகுதியாக மாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு உள்ளாட்சியும் முயற்சி செய்து வந்த போதிலும், அது நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது. குப்பையை கட்டுப்படுத்த சமீபத்தில் மதுராந்தகம் நகராட்சி ஒரு அதிரடி தீர்மானத்தை கொண்டு வந்தது. குறிப்பிட்ட சாலைகளில் குப்பையை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த, கழிவுகளை கொடுத்தால் தங்க நாணயம் பரிசு என்று மறைமலைநகர் நகராட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated on Tuesday, 14 August 2012 05:33
 

குப்பைக் கழிவுகள், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்! திருச்சி மாநகராட்சியின் புதிய முயற்சிகள்

Print PDF

தினமணி                30.07.2012

குப்பைக் கழிவுகள், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்! திருச்சி மாநகராட்சியின் புதிய முயற்சிகள்

திருச்சி, ஜூலை 29: தினமும் மாநகரில் சேகரமாகும் மக்கும் குப்பைக் கழிவுகளில் இருந்து எரிவாயு, மின்சாரம் தயாரிக்கவும், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் திருச்சி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாநகராட்சி இப்போது முதல்வரின் தொகுதியைக் கொண்ட (ஸ்ரீரங்கம்) மாநகராட்சி என்ற கூடுதல் பலமும்(!) பெற்றிருக்கிறது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த சந்தை, வருவாய் பெருக்கும் வணிகவளாகங்கள், நெரிசல் குறைக்கும் மேம்பாலங்கள், மேல்நிலை நடைப்பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான தேவைகள் நீண்டகால எதிர்பார்ப்புகளாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், சுகாதாரப் பாதுகாப்பில் ஒவ்வொரு நாளும் மாநகரில் சேகரமாகும் கழிவுகளை அகற்றுவது, மாநகராட்சி நிர்வாகத்தின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சூரிய சக்தியைப் பயன்படுத்துவது உள்ளிட்டவைகளும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் திருச்சி மாநகரில் 436 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அரியமங்கலத்திலுள்ள குப்பைக் கிடங்கில் இவை மலைபோல குவிக்கப்படுவதும், ஒவ்வொரு முறையும் (புதிய ஆணையர்- புதிய ஆட்சி!) இதற்கான "கவர்ச்சிகர' திட்டங்கள் அறிவிக்கப்படுவதும் வாடிக்கை.

இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக குப்பைக் கிடங்கை மாற்றுவது என்ற யோசனைக்கு நடுவே, மக்கும் தன்மையுள்ள மீன், இறைச்சி, காய்கனி மற்றும் உணவுக் கழிவுகளில் இருந்து எரிவாயு அல்லது மின்சாரம் தயாரிக்கவும் தற்போது மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சோதனை முறையில் நாளொன்றுக்கு 5 மெட்ரிக் டன் மக்கும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு காந்தி மார்க்கெட் வளாகத்திலேயே "பயோ டைஜெஸ்டர்' திட்ட அமைப்பை நிறுவி எரிவாயு, மின்சாரம் தயாரிக்கப்படவுள்ளது.

இதை நிறுவி 3 ஆண்டுகள் பராமரித்து பிறகு மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் தகுதி, அனுபவமுள்ள நிறுவனங்களைக் கண்டறிவதற்காக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

சூரிய சக்தி மின் நிலையம்:

இதேபோல, மின் சக்தியை சேமிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆண்டுக்கு ரூ. 11 லட்சம் மின் கட்டணத்தை சேமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

படிப்படியாக மாநகராட்சியின் மற்ற அலுவலகங்களிலும் இந்த ஏற்பாட்டைச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் சாலையிலுள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் கூட்ட மன்றம், மேயர், ஆணையர், துணை மேயர் அறைகள், பொன்மலைக் கோட்ட அலுவலகம், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள மின் விளக்குகள், விசிறிகள், கணினிகள், குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் மூலம் ஆண்டுக்கு 1,51,790 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான மின் கட்டணமாக ஆண்டுக்கு சராசரி ரூ. 10.15 லட்சம் மின் வாரியத்துக்கு செலுத்தப்படுகிறது.

தற்போது இந்தச் செலவை மிச்சப்படுத்தவும், சூரிய சக்தியைப் பயன்படுத்தவும், மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் "சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்' ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இந்த நிலையத்தை அமைக்க மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித் துறையின் 30 % மானியத் தொகை கிடைக்கும். மேலும், 60 % தொகையை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் கடன் பெறவும், 10 % மாநகராட்சி பொது நிதியிலிருந்து செலவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமான கவர்ச்சிகரமான திட்டங்களாக இல்லாமல் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற திட்டங்களுக்கு தற்போது அரசின் கொள்கை முடிவுகளும் சாதகமாக இருப்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

ரூ.2.17 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு நடவடிக்கை

Print PDF

தினமலர்                   10.11.2011

ரூ.2.17 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி நகராட்சியில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தர்மபுரி நகராட்சியில் தினம் 32 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கழிவுகள் பென்னாகரம் ரோட்டில் உள்ள சோகத்தூர் அருகே கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டாக இந்த பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.கடந்த காலங்களில் விவசாய பணிக்கு குறைந்த விலையில் குப்பை கழிவுகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். தற்போது, மக்காத குப்பைகள் கலந்து இருப்பதால், இந்த குப்பைகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்துவதில்லை. பென்னாகரம் சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டøது இதை தொடர்ந்து அப்பகுதியில் நகராட்சி மூலம் குப்பை கொட்ட நீதிமன்றத்தில் அப்பகுதி மக்கள் தடை பெற்றனர்.நகராட்சி மூலம் தடங்கம் கிராமத்தில் 11 ஏக்கர் பரப்பில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டு தற்போது, குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. பென்னாகரம் சாலையில் உள்ள குப்பைகளையும் அகற்றும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. தடங்கம் பகுதியில் குப்பைகளை மக்கும், குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது.இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் எடை மேடை, காவலர் குடியிருப்பு, தண்ணீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி, மண்புழு உரம் தயாரித்தல், மழைநீர் வடிகால் வசதி ஆகியவை ஏற்படுத்தவும், இதற்காக 2 கோடியே 17 லட்ச ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.திட்ட மதிப்பீடு அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஒப்புதல் பெறும் வகையில் இதற்கான தீர்மானம் இன்று நடக்கும் நகராட்சி கூட்டத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


Page 36 of 66