Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குத்தம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

Print PDF

தினமணி 13.10.2010

குத்தம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

சென்னை, அக். 12: குத்தம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளதாக அம்பத்தூர் நகராட்சி ஆணையர் ஆசிஷ்குமார் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஐ..டி.யில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது குத்தம்பாக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தால் செம்பராக்கம் ஏரி பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அம்பத்தூர் நகராட்சி ஆணையர் ஆசிஷ்குமார் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குத்தம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் அம்பத்தூர், வளசரவாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய நகராட்சிகள் இணைந்துள்ளன. இதில், அம்பத்தூர் நகராட்சிக்கு 40 ஏக்கர் நிலமும், பூந்தமல்லி, வளசரவாக்கம், மதுரவாயல் ஆகிய நகராட்சிகளுக்கு 6 ஏக்கரும், திருவேற்காடு நகராட்சிக்கு 7 ஏக்கர் நிலங்களும் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இப்பகுதிகளில் உள்ள குப்பைகளை மக்கும் தன்மை மற்றும் மக்காத தன்மை என தரம் பிரித்து அவற்றை குத்தம்பாக்கம் பகுதியில் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை அங்கீகரிப்பது தொடர்பான பணிகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குத்தம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் செம்பரம்பாக்கம் ஏரி பாதிக்கப்படும் என்ற கருத்து, எந்த ஆதாரமும் இல்லாதது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத வகையிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே திடக்கழிவு மேலாண்மை தொழிற்சாலை அமைக்கப்பட இருப்பதால் இந்த பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்படும். மாசுகளை கட்டுப்படுத்தும் விதத்தில் மரங்கள் இதனை சுற்றி வளர்க்கப்படுகின்றன.

குப்பைகளை சுத்திகரிக்கப்பட்டு அவை எரிபொருள், கற்கள் உள்ளிட்டவைகளாக மாற்றப்படுவதால் குப்பைகள் இங்கு தேங்க வாய்ப்பில்லை.

மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 1.4 மீட்டர் ஆழத்துக்கு 4 முதல் 5 தடுப்புகள் இந்த நிலத்தில் அமைக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் நலனைக் கருத்தில் கொண்டே இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி சிறிதளவும் பாதிக்கப்படாது.

இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை கருத்தில் கொண்டே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளிக்கும். பொதுமக்களுக்கும், ஏரியின் நீருக்கும் பாதிப்புகள் உண்டாகும் வகையில் இந்த திட்டம் உள்ளதாக கூறி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளிக்காத பட்சத்தில், இந்த திட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம் என்றார் ஆசிஷ்குமார்.

அம்பத்தூர் நகர் மன்ற தலைவர் கே.என். சேகர், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

திடக்கழிவு திட்டத்துக்கு ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 09.10.2010

திடக்கழிவு திட்டத்துக்கு ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீடு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் திடக்கழிவு திட்டத்தை செயல்படுத்த 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி நகரில் தினம் 30 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. சேகரித்து அள்ளப்படும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம் பென்னாகரம் ரோட்டில் கொட்டி குவிக்கப்படுகின்றன.குப்பைமேடு அருகே தர்மபுரி சத்யா நகர், இசை வேளாளர் நகர், சவுளூப்பட்டி, .ரெட்டிஅள்ளி அரசு போக்குவரத்து கழக குடியிருப்புகள் உள்ளன. 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டுவதால், அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலையும், துர்நாற்றமும் அடித்து வருகிறது.

சாலையோரத்தில் உள்ள இந்த குப்பை மேட்டில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் எறிந்து செல்லும் சிகரெட் தனலில் தீப்பிடித்து, அடிக்கடி அப்பகுதி புகை மண்டலமாக கிளம்பி பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது.நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் உள்ள குப்பை மேட்டை அகற்றவும், தடங்கம் பஞ்சாயத்து பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக நகராட்சிக்கு 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தடங்கம் பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் பகுதியில் சுற்றுசுவர் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இரு பெரிய தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த பின் பென்னாகரம் சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் அகற்றவும் நகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Last Updated on Monday, 11 October 2010 05:48
 

தர்மபுரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல் குவியும் குப்பைக்கு நிரந்தர தீர்வு

Print PDF

தினகரன் 08.10.2010

தர்மபுரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல் குவியும் குப்பைக்கு நிரந்தர தீர்வு

தர்மபுரி, அக்.8: தர்மபுரி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம்பிரிக்கப் படவுள்ளது. பென்னாகரம் சாலையில் உள்ள குப்பை குவியல் படிப்படியாக அகற்றப்படவுள்ளது.

தர்மபுரி நகரில் தினமும் 30 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை நகராட்சி வாகனங்கள் மூலம் பென்னாகரம் சாலையில் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைமேடு அருகே சத்யாநகர், இசைவேளாளர் நகர், சவுளுப்பட்டி, .ரெட்டிஅள்ளி, அரசு போக்குவரத்து கழக குடியிருப்பு ஆகியவை உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மர்ம நபர்கள் சிலர், மாலை நேரங்களில் குப்பையை தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

மழைக்காலங்களில் குப்பைகளிலிருந்து பெருகிவரும் கழிவுநீர், நிலத்தடி நீரில் மாசு ஏற்படுகிறது. இப்பகுதிகளில் துர்நாற்றத்துடன் கூடிய கழிவுநீர் தான், ஆழ்துளை கிணற்றில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் நீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகரமன்ற தலைவர் ஆனந்தகுமார்ராஜா கூறும்போது, "குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். தடங்கம் ஊராட்சி பகுதியில் குப்பைகளை ஒட்டுமொத்தமாக கொட்டி வைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு தற்போது சுற்றுசுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2 பெரிய ராட்சத தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்தவுடன், பென்னாகரம் ரோட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்படும். குப்பை மேடால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், கண்காணிக்கவும் சூப்பர்வைசர் தலைமையில் 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

 


Page 40 of 66