Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க ரூ. 50 லட்சத்தில் இயந்திரம்

Print PDF

தினமணி 07.06.2010

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க ரூ. 50 லட்சத்தில் இயந்திரம்

கரூர், ஜூன் 6: புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அழிக்க ரூ. 50 லட்சத்தில் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், புலியூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலை, மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியியல், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் செட்டிநாடு சிமென்ட் ஆலையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சி. முனிரெத்தினம் தலைமை வகித்து, நகர்புறத் திடக் கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதற்காக சிமென்ட் ஆலை மூலமாக நிர்மாணிக்கப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான புதிய இயந்திரத்தைத் தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

இன்றைய காலகட்டத்தில் நகரீய திடக்கழிவு மேலாண்மையானது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்குக் காரணம், அதிவிரைவான நகர்புற மயமாதலே ஆகும்.

உள்ளாட்சி, நகர் நல அமைப்புகள் நகரீய திடக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்க, அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். நகரீய திடக்கழிவானது திடக்கழிவாகவும், மென் திடக்கழிவாகவும் உள்ளன.

மாறிவரும் தற்கால வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கத்தால் நகரீயக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன. 1947-ல் இந்தியாவின் நகரங்கள் சுமார் 6 மில்லியன் டன் அளவுக்கு திடக்கழிவை ஏற்படுத்தின. இது 1997-ல் 48 மில்லியன் டன்னாக உயர்ந்தன. பல நகரங்களில் திடக் கழிவைச் சேகரிக்கவோ, சரியான முறையில் அழிக்கவோ தேவையான வசதிகள் இன்னும் ஏற்படவில்லை. தற்போது திடக்கழிவு சேகரிக்கப்படும் இடங்களில் நிலத்தடி நீரும், நிலமும் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக உபயோகிப்பாளர்களின் சந்தைப் பெருக்கத்தின் காரணமாக, விற்பனைக்கு வரும் பொருள்கள் டின்களிலும், அலுமினியம், பிளாஸ்டிக் தாள்களிலும் பொதுமக்களைச் சென்றடைகிறது. மக்கும் தன்மையற்ற இந்தப் பொருள்கள், சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்து வருகின்றன.

இந்தியாவில் கரூர் நகராட்சி உள்பட பல உள்ளாட்சி அமைப்புகள் பிளாஸ்டிக் உபயோகத்தைத் தடை செய்துள்ளன. இதர அமைப்புகளும் இந்தத் தடையைப் பின்பற்றினால் சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டைத் தவிர்க்க இயலும். திடக்கழிவைச் சேகரித்து சரியான முறையில் அழித்தொழிக்க, நகராட்சி அமைப்புகள் டன் ஒன்றுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,500 வரை செலவிடுகின்றன. அதில் சுமார் 60 சத திடக் கழிவைச் சேகரிப்பதற்கும் 30 சதம் சேகரித்து எடுத்துச் செல்வதற்கும் செலவிடுகின்றன. 5 சதம் மட்டும் திடக் கழிவை அழிப்பதற்கானது.

2025-க்குள் இந்தியாவில் நகரீய கழிவுப் பொருள்களின் தன்மையானது பெருமளவில் மாற்றம் காணும். ஆர்கானிக் கழிவுகள் 40 சதத்திலிருந்து 60 சதமாகவும், பிளாஸ்டிக் கழிவுகள் 4-லிருந்து 6 சதமாகவும் உலோகக் கழிவுகள் 1-லிருந்து 4 சதமாகவும், கண்ணாடிக் கழிவுகள் 2-லிருந்து 15 சதமாகவும் உயரும். அதேநேரத்தில், சாம்பல், மணல் மற்றும் அவை சார்ந்த கழிவுகள் 47 சதத்திலிருந்து 12 சதமாகக் குறையும்.

பிளாஸ்டிக்கின் ஆயுள் 10 லட்சம் ஆண்டுகளாகும். ஆகவே, பிளாஸ்டிக் கழிவுகளை நாம் மேலும் பெருக்கக் கூடாது. அவை உருவாவதைத் தடுக்க வேண்டும். கழிவிலிருந்து சக்தி பெறும் முறையை நாம் கைக்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மையானது உலக அளவிலும் நகர்ப்புறம் அளவிலும் வளர்ந்து வரும் பெரும் சவாலாகும்.

எனவே, திடக்கழிவைச் சரியான முறையில் சேகரித்து, முறையாக அழித்தொழிக்க நாம் அனைவரும் முழு மனதோடு அதற்கான வேலைக ளில் ஈடுபட வேண்டும். இதுவே நாம் வரும் சந்ததியினருக்குக் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாகும். இதை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்றார் அவர். செட்டிநாடு சிமென்ட் ஆலை கணக்கு மற்றும் நிர்வாக துணைத் தலைவர் ஏ. சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குநர் சி. சுதாகர் ஆகியோர் பேசினர்.

மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ். சண்முகசுந்தரம் வாழ்த்தினார். தொழில்சாலை பொறியியல் துணைத் தலைவர் என். முத்துசாமி வரவேற்றார். முதுநிலைப் பொது மேலாளர் இயக்கம் ஏ. அண்ணாதுரை நன்றி கூறினார்.

 

கோவில்பட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

Print PDF

தினமலர் 07.06.2010

கோவில்பட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சியில் தெருக்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்காத கழிவுப் பொருட்களான ஒரு டன் எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பேப்பர் கழிவுகளை தாழையூத்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் நிகழ்ச்சி ஆணையாளர் விஜயராகவன் உத்தரவின் பேரில், நகர் மன்ற தலைவி மல்லிகா தலைமையில், சுகாதார அலுவலர் ராஜசேகரன் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், சீனிராஜ் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

எட்டயபுரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு : மறுசுழற்சிக்காக சிமெண்ட் தொழிற்சாலைக்கு சென்றது

Print PDF

தினமலர் 04.06.2010

எட்டயபுரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு : மறுசுழற்சிக்காக சிமெண்ட் தொழிற்சாலைக்கு சென்றது

எட்டயபுரம் : எட்டயபுரத்திலிருந்து சங்கர் சிமெண்டு ஆலைக்கு மினிலாரியில் மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சங்கர் சிமெண்டு ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களினால் சுற்றுப்புறசூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தை குறைக்க வேண்டுமென்று அரசு சார்பில் மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. எட்டயபுரம் டவுன் பஞ்.,சில் இது சம்பந்தமாக விழிப்புணர்வு நடக்கிறது.

டவுன் பஞ்.,சில் சேரும் குப்பைகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று குப்பைகளை தனியாக பிரித்தெடுத்து மட்காத குப்பை பிளாஸ்டிக் பொருட்களை நெல்லை சங்கர் சிமெண்ட் நிறுவனத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவை மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எட்டயபுரம் டவுன் பஞ்.,ஐ தலைமையிடமாகக் கொண்டு எட்டயபுரம் 694 கிலோ, ஆத்தூர் 45 கிலோ, ஏரல் 45 கிலோ, சாயர்புரம் 36 கிலோ, ஸ்ரீவைகுண்டம் 90 கிலோ, பெருங்குளம் 30 கிலோ என மொத்தம் 940 கிலோ சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மினிலாரி மூலம் எட்டயபுரத்திலிருந்து சங்கர்சிமெண்டு ஆலைக்கு டவுன் பஞ்.,தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கொடியசைத்து பொது சுகாதார மினிலாரியை அனுப்பி வைத்தனர்.டவுன் பஞ்.,செயல் அலுவலர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராஜாமுத்து, சிங்கராஜ், டவுன் பஞ்.,துணைத் தலைவர் கோவிந்த ராஜபெருமாள், கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 49 of 66