Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்த காஞ்சிபுரம் நகராட்சி திட்டம்

Print PDF

தினமணி 01.04.2010

குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்த காஞ்சிபுரம் நகராட்சி திட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 31: குப்பையை உரமாக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த காஞ்சிபுரம் நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான உரத்திடலை நிறுவ சென்னை நிர்வாக இயக்குநருக்கு அனுமதி கோரவும் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

÷காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் மகாலட்சுமிதேவி மற்றும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

÷காஞ்சிபுரம் நகரில் தினமும் 80 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரம் ஆகின்றன. இக் குப்பைகளில் இருந்து ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மறு சுழற்சி செய்தல், உரத் திடலை நிறுவி இயக்கி ஒப்படைத்தல் ஆகிய பணிகளை செய்ய தனியார் நிறுவனம் ஒன்று நகராட்சியிடம் அனுமதி கோரியுள்ளது.

÷இது குறித்து இந்த நிறுவனத்தின் அறிக்கையை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்புவது என்று நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

÷பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கவும், பள்ளிகள், கல்வி நிலையங்களில் சுற்றிலும் 100 அடி தூரத்துக்கு புகையிலை சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது என்ற விதியும் தீவிரமாக அமல்படுத்த துண்டறிக்கைகள் அச்சிட்டு வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

÷குடிநீர், சாலை அமைத்தல், கழிப்பிடம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

÷அப்போது பாமக கவுன்சிலர் சாந்தி, தீர்மானம் அதிகம் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் பணிகள் நடைபெறவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரிகள் எந்தப் பகுதியில் என்று குறிப்பிட்டு கூறினால் அவை சரி செய்யப்படும் என்றனர்.

÷இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை அளிப்பதில் பதிவு மூப்பு பின்பற்றப்பட வேண்டும் என்றும், விளம்பரப் பலகைகளை அகற்றும்போது பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் காங்கிரஸ் கவுன்சிலர் சிகாமணி வலியுறுத்தினார்.

Last Updated on Thursday, 01 April 2010 09:51
 

குப்பையிலிருந்து மின்சாரம்: திட்டத்தை செயல்படுத்த கவுன்சிலர் கோரிக்கை

Print PDF

தினமணி 05.03.2010

குப்பையிலிருந்து மின்சாரம்: திட்டத்தை செயல்படுத்த கவுன்சிலர் கோரிக்கை

கடையநல்லூர், மார்ச் 4: கடையநல்லூர் நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, உறுப்பினர் ராமநாதன் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஆணையர் பதிலளித்தார்.

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம், தலைவர் இப்ராஹிம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆணையர் அப்துல்லத்தீப், துணைத் தலைவர் காளிராஜ், பொறியாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், கடையநல்லூர் நகராட்சியிலுள்ள தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பயன்பாட்டுக்காக செலவிடப்படும் மின் செலவு ஆண்டுக்கு ரூ. 32.20 லட்சம் ஆகிறது. அதேநேரம், கடையநல்லூர் நகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 24.2 டன் குப்பை கிடைக்கிறது. 10 டன் குப்பை மூலம் சுமார் 1,200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

எனவே, நகராட்சியில் குப்பை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 62.40 லட்சம் வருவாய் கிடைக்கும் என, உறுப்பினர் ராமநாதன் தெரிவித்தார். இதை மற்ற உறுப்பினர்களும் வரவேற்றனர்.

ஆணையர்: இது நல்ல திட்டம். இதுகுறித்து அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.

நகராட்சி அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை என, உறுப்பினர்கள் பாதுஷா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் பேசியுள்ளேன், பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களிடம் அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன் என்றார் ஆணையர்.

மரியாதை கொடுக்க தெரியாத அலுவலர்கள் இடமாறுதல் பெற்றுச் செல்லுமாறு, தலைவர் கடிந்து கொண்டார். வாரச்சந்தையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என, ராமநாதன், மைதீன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். மேலும் வாரச்சந்தையை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் பதிலளித்தார்.

Last Updated on Friday, 05 March 2010 12:00
 

குப்பைகளை மக்கவைக்க புதிய தொழில்நுட்பம்

Print PDF

தினமணி 04.03.2010

குப்பைகளை மக்கவைக்க புதிய தொழில்நுட்பம்

சிவகாசி, மார்ச் 3: சிவகாசி நகராட்சியில் குப்பைகளை மக்கவைப்பதற்குப் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் இதற்கானப் பணிகள் நடைபெற உள்ளன என்றார்.

சிவகாசி நகராட்சிக்கு சொந்தமான உரக் கிடங்கு சிவகாசி-சாத்தூர் சாலை பாரைப்பட்டியில் 5.36 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நகராட்சியில் 175 துப்பரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குப்பைத் தொட்டிகளை எடுத்துச் செல்லும் லாரி 3, டிராக்டர் 4, லாரி 3 ஆ க 10 வாகனங்கள் உள்ளன. தினசரி 45 மெட்ரிக் டன் குப்பைகள் எடுக்கப்படுகிறது.

தற்போது இந்த குப்பைகள் பாரைப்பட்டியிலுள்ள குப்பைக் கிடங்கில் அப்படியே கொட்டப்படுகிறது. தற்போது குப்பைகளை ஒரே இடத்திற்கு கொண்டு செல்ல ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரக்கிடங்கில் போர்வெல், தண்ணீர் தொட்டி அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரக் கிடங்கில் குப்பையை உலர்த்துவதற்கு, 50 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு மேடை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

இப்பணி நிறைவு பெற்றதும், பிரித்து எடுக்கப்பட்ட குப்பைகள் உலர்த்தும் மேடையில் போடப்பட்டு, அதன் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு. அதிலிருந்து வெளியேறும் அசுத்த நீர், இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு, உரக்கிடங்கினைச் சுற்றிலும் வைக்கப்படவுள்ள மரக் கன்றுகளுக்கு ஊற்றப்படும். உலர் மேடையில் 30 நாள்கள் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி தண்ணீர் ஊற்றி, 30 நாள் சென்றதும், மற்றொரு மேடையில் குப்பைகளைப் போட்டு தண்ணீர் ஊற்றப்படும். 2-வது மேடையிலுள்ள குப்பை 30 நாள் ஆனதும், முதல் மேடையில் உள்ள குப்பைகள் நன்றாக மக்கிவிடும்.

இந்த மக்கிய குப்பைகள் விவசாயிகளுக்கு விற்கப்படும் என்றார். இத் திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அசோகன்.

Last Updated on Thursday, 04 March 2010 09:43
 


Page 52 of 66