Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

பத்மநாபபுரம் நகராட்சியில் பிளாஸ்டிக் பிரிக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 18.11.2009

பத்மநாபபுரம் நகராட்சியில் பிளாஸ்டிக் பிரிக்கும் பணி தொடக்கம்

தக்கலை, நவ. 17: பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளில் குப்பையில் இருந்து பிளாஸ்டிக் பொருள்களைப் பிரித்தெடுக்கும் பணியை நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் ஆணையர் செல்லமுத்து, சுகாதார அலுவலர் கிருஷ்ணன், பொறியாளர் சனல்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் மோகன், சிவகுமார் மற்றும் மில்டன், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கழிவுப் பொருள்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் பொருள்கள் மக்காத குப்பையாக பல்வேறு இடங்களில் தேங்கி சுகாதாரக் கேட்டையும், நோய்களையும் உருவாக்கி வருகிறது.

எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களை வீடுகளில் பயன்படுத்தும்போது பிரித்து வைக்க வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும்வகையில் மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ரேவன்கில்.

Last Updated on Wednesday, 18 November 2009 08:42
 

எங்கே திடக்கழிவு மேலாண்மை?

Print PDF

தினமணி 09.11.2009

எங்கே திடக்கழிவு மேலாண்மை?

கோவை, நவ. 8: கோவையை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன.

கோவை நகரில் தினமும் 800 டன் குப்பைகள் வெளியேறுகின்றன. இவற்றில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதிலேயே பெரும் பிரச்னையை மாநகராட்சி எதிர்கொள்கிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் முதல்படியே, குப்பைகள் சேரும் இடத்திலேயே தரம் பிரிப்பதுதான்.

ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில் ரூ.90 கோடியில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வீடுகளில் சேரும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 லட்சத்து 58 ஆயிரம் குப்பைக் கூடைகள் பொதுமக்களுக்கு இலசமாக வழங்கப்பட்டன. மக்கும் குப்பைக்கு பச்சை கூடை, மக்காத குப்பைக்கு வெள்ளை கூடை என பிரித்துப் போடும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், பெரும்பாலான வீடுகளில் குப்பைக் கூடைகள் வேறு பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர, வீடுகளில் இருந்து குப்பைகளைச் சேகரிக்க 6 குப்பைத் தொட்டிகளுடன் கூடிய குப்பை வண்டிகள் துப்புரவாளர்களுக்கு வழங்கப்பட்டன.

பொதுமக்கள் கொட்டும் குப்பைகளை துப்புரவாளர்களும் முறையாக பச்சை, வெள்ளை குப்பைத் தொட்டிகளில் எடுத்துச் செல்வதில்லை. தள்ள முடியாத அளவுக்கு மோசமான பேரிங்குகளுடன் குப்பை வண்டிகள் இருப்பதால் பெரும்பாலான வார்டுகளில் அவற்றை துப்புரவாளர்கள் பயன்படுத்துவதில்லை.

சில வார்டுகளில் துப்புரவாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தள்ளுவண்டிகள் இல்லை. இன்னும் சில வார்டுகளுக்கு தேவைக்கு அதிகமாக வண்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வண்டிகள் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

முதன்மைச் சேகரிப்பிலேயே பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுகளில் குப்பைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது. அதோடு, பொதுமக்களும் சில இடங்களில் சாக்கடைகளுக்குள் குப்பைகளைக் கொட்டி விடுகின்றனர். இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களைப் பரப்புவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்பது கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டம் வருவதற்கு முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. குப்பையில்லா நகரமாக கோவை மாறுவது எப்போது?... என்ற கேள்விக்குத்தான் இன்னும் பதில் கிடைக்கவில்லை.

Last Updated on Monday, 09 November 2009 09:31
 

பிளாஸ்டிக் கழிவு இல்லாமல் அம்பத்தூர் தொழில்பேட்டை நவீன நகரம் ஆகிறது; 2015க்குள் செயல்படுத்த திட்டம்

Print PDF
மாலை மலர் 4.11.2009

பிளாஸ்டிக் கழிவு இல்லாமல் அம்பத்தூர் தொழில்பேட்டை நவீன நகரம் ஆகிறது; 2015க்குள் செயல்படுத்த திட்டம்

சென்னை, நவ. 4-

அம்பத்தூர் தொழில்பேட்டை 1500 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, ஆடைகள் தயாரிப்பு, இரும்பு தொழில்கள், கட்டிட நிறுவனங்கள் என 1500-க்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் உள்ளன.

இதுதவிர டி.வி.எஸ். ரானே, முருகப்பா, டன்லப், ஆவின் என பிரபலமான வர்த்தக நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளன. இங்குள்ள தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 2500 கோடி ரூபாய். 25 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் இங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பெருமளவில் பிளாஸ்டிக்கழிவுகள் குவிகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது.

எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையை பிளாஸ்டிக்கழிவு இல்லாத நவீன நகரம் ஆக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் இதை செய்து முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

"நவீ மும்பை" என்ற அமைப்பு, அந்த மாநிலத்தில் நவீன தொழில் நகரங்களை உருவாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு இல்லாத நவீன தொழிற்பேட்டைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 5 பேர் கொண்ட குழு அம்பத்தூரில் இருந்து புனே சென்று அங்குள்ள நவீன தொழில் பேட்டைகளை பார்வையிட்டு திரும்பி உள்ளது.

அம்பத்தூர், திருமுடிவாக்கம், திருமழிசை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்க உயர்தர நவீன துணை நிறுவனங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூ.47.20 கோடி செலவில் நவீன மயம் ஆகும் அம்பத்தூர் தொழில்பேட்டை வளர்ச்சி திட்டத்துக்கு தற்போது ரூ.36.66 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 04 November 2009 11:39
 


Page 58 of 66