Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

நவீன சமுதாய சமையல் கூடம்

Print PDF

தினமணி               15.06.2013

நவீன சமுதாய சமையல் கூடம்

தாம்பரம் பாரத் நகரில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள, கழிவுகளில் இருந்து பெறப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமுதாய சமையல் கூடத்தை வெள்ளிக்கிழமை பார்வையிடுகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி. உடன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, நகர்மன்றத் தலைவர் கரிகாலன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்.
தாம்பரம் பாரத் நகரில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள, கழிவுகளில் இருந்து பெறப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமுதாய சமையல் கூடத்தை வெள்ளிக்கிழமை பார்வையிடுகிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி. உடன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, நகர்மன்றத் தலைவர் கரிகாலன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்.

தமிழ்நாட்டில் முதன்முதலாக, மக்கும் குப்பை மற்றும் கழிப்பிட கழிவு மூலம் உருவாகும் எரிவாயுவை ஏழை,எளிய மக்கள் எவ்வித கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 12 கேஸ் இணைப்புகள் கொண்ட நவீன சமுதாய சமையல் கூடத்தை தாம்பரம் நகராட்சி உருவாக்கி உள்ளது.

இந்த சமுதாய சமையல் கூடத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். ரூ. 25 லட்சம் செலவில் இந்த சமுதாய சமையல் கூடத்தை அமைத்த தாம்பரம் நகராட்சியை அமைச்சர் பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தாம்பரம் நகராட்சி நிர்வாகம் மிகவும் புதுமையான திட்டத்தை ஏழை,மக்கள் பயன் அடையும் வகையில் செயல்படுத்தி உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் புதிய சமையல் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த சமுதாய சமையல் கூடத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள "அம்மா' சுயஉதவிக் குழுவினருக்கு அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.

கடந்த 2003ல் கிழக்குத் தாம்பரம் பாரத் நகரில் 292 குடிசைகளைக் கொண்ட

குடியிருப்புகளுக்கென ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கழிப்பிட வசதி கொண்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இருந்தது.

இந்தக் கழிப்பிடம் தான் தற்போது நவீன கழிப்பிடமாகவும், சமுதாய சமையல் கூடமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பல வருடங்களாகக் கழிப்பிட வசதியின்றி சிரமப்பட்ட பாரத் நகர் மக்கள், பராமரிப்பின்றி இருந்த கழிப்பிடத்தை சீரமைத்துத் தருமாறு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர், தாம்பரம் பெருநகராட்சித் தலைவர் எம்.கரிகாலன், ஆணையர் சிவசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளிடம் கழிப்பிடத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

கழிப்பிடக் கழிவில் இருந்து உருவாகும் வாயு,மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கும் குப்பை மூலம் உருவாகும் வாயு மூலம் எரிவாயு தயார் செய்ய முடியும் என்பதை சோதனை மூலம் உறுதி செய்த தாம்பரம் நகராட்சி நிர்வாகம், ரூ25 லட்சம் செலவில் ஏழை,எளிய மக்கள்

பயன்படுத்தும் நவீன கழிப்பிடமும், அதன் மூலம் பெறும் எரிவாயுவை கொண்டு சமுதாய சமையல் கூடமும் அமைத்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் முதன் முதலாக கழிப்பிட கழிவு மூலம் செயல்படும் கட்டணமில்லாத சமுதாய சமையல் கூடத்தை உருவாக்கிய நகராட்சி என்ற பெயரை தாம்பரம் நகராட்சி பெற்றுள்ளது.

 

குப்பையில்லா சூழ்நிலையை உருவாக்கி கோவை மாநகரை பசுமையாக்க திட்டம் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள்

Print PDF
தினத்தந்தி              07.06.2013

குப்பையில்லா சூழ்நிலையை உருவாக்கி கோவை மாநகரை பசுமையாக்க திட்டம் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள்


கோவை மாநகராட்சியில் குப்பையில்லா சூழ்நிலையை உருவாக்கி பசுமையாக்க திட்டமிட்டு உள்ளதால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகர மேயர் செ.ம.வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

சிங்கப்பூரில் பயிற்சி


நகர்ப்புற ஆளுகையை மேம்படுத்துவது குறித்த சிறப்பு பயிற்சி சிங்கப்பூரில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சி சார்பில் நான் (மேயர்), ஆணையாளர் உள்பட 3 பேர் சிங்கப்பூர் அரசின் தேசிய வளர்ச்சி அமைச்சக அழைப்பை ஏற்று பயிற்சியில் பங்கேற்றோம்.

இதில் தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த வல்லூனர்கள் பங்கேற்று நகர்ப்புற திட்டமிடுதல், நகர கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீராதார துறை போன்ற துறைகளை சேர்ந்த வல்லுனர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு குழுவும், அவரவரின் நகரத்துக்கு தேவையான திட்டங்களை வகுத்தனர்.

பசுமையாக மாற்ற திட்டம்


சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கு, தொலைநோக்கு பார்வையும், சீரிய கொள்கைகளின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தியதே முக்கிய காரணம் ஆகும். அந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் டன் திடக்கழிவில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரித்து வருகிறார்கள். அத்துடன் நிலப் பரப்பில் 40 சதவீதம் பசுமையாக உள்ளதால் அவ்வப்போது அங்கு மழை பெய்து வருகிறது.

அது போன்று நமது மாநகராட்சி பகுதியிலும் பசுமை திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். முதற் கட்டமாக அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, செஞ்சிலுவை சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம் ஆகியவற்றின் முன்பு காலியாக இருக்கும் இடங்களில் செடிகள் மற்றும் புற்களை வளர்த்து பசுமையாக மாற்ற உள்ளோம்.

குப்பையில் இருந்து மின்சாரம்


ரோட்டின் ஓரத்தில் மணல் பகுதியாக காணப்படுவதால் தூசி பறக்கிறது. அதை தடுக்க, மணல் பகுதியில் புற்களை அமைக்க உள்ளோம். அதுபோன்று கோவையில் உள்ள 8 குளங்களையும் மேம்படுத்தி அங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா, நடைபாதை, புற்கள், அழகுசெடிகள் ஆகியவை வைக்க உள்ளோம்.

கோவை மாநகராட்சியில் தினமும் 800 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதில் 400 டன் குப்பை போக மீதி உள்ள 400 டன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் குப்பையில்லா கோவையை உருவாக்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொது இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

வ.உ.சி. பூங்கா

அத்துடன் வ.உ.சி. பூங்காவை நவீனப்படுத்துவதுடன், அங்கு அனைத்து வசதிகளும் வைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் 100 கி.மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டும். இன்னும் ஒரு வருடத்தில் பணிகள் முடிந்து விடும். அதன்பின்னர் சாக்கடை நீர் தேங்கி, கொசுக்கள் உருவாகுவது முற்றிலும் தடுக்கப்படும்.

மேலும் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சர்வே விண்ணப்பம் கொடுக்கப்பட உள்ளது. அதில் தங்கள் பகுதியில் உள்ள நிறை, குறைகளை பொதுமக்கள் எழுதி கொடுக்கலாம். கோவை மாநகரை சிங்கப்பூருக்கு இணையாக மாற்ற, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். அதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார். அப்போது ஆணையாளர் லதா, துணை ஆணையாளர் சிவராசு ஆகியோர் உடன் இருந்தனர்.
 

குப்பையில் இருந்து தினமும் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம்

Print PDF
தினகரன்               07.06.2013

குப்பையில் இருந்து தினமும் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம்


கோவை: சிங்கப்பூர் போலவே கோவையிலும் குப்பையில் இருந்து தினம் ஐந்து மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்பாடுகளை பார்வையிடுவதற்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 11 மாநகராட்சி பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாநகராட்சி மேயர் வேலுச்சாமி, கமிஷனர் லதா ஆகியோர் அடங்கிய குழுவினர் இதில் இடம் பெற்றனர். ஐந்து நாட்கள் அங்கு பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை இங்குள்ள கட்டமைப்புக்கு ஏற்ப பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர். ஐந்து நாள் பயணத்தை முடித்து கொண்டு கோவை திரும்பிய மேயர் வேலுச்சாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

 ஆங்கிலேயர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு நாடு  சிங்கப்பூர். குடிக்க தண்ணீர்கூட இல்லை. ஆனால், இன்று பொருளாதாரத்தில் உலகிலேயே 2வது இடத்தில் உள்ளது. வசிக்க தகுந்த நாடு என்ற பட்டியலிலும் 2வது இடத்தில் உள்ளது. மொத்த பரப்பளவில் 40 சதவீதம் பசுமையாகவே உள்ளது. 94 சதவீத மக்கள் அரசு வழங்கிய வீடுகளில் வசிக்கின்றனர். 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அரசே வீடு வழங்கியுள்ளது. 6 சதவீதம் பேர் மட்டுமே தாங்களாக கட்டிய வீடுகளில் வசிக்கின்றனர். இருபது  ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் போலவே கோவையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சிங்கப்பூரில் தினமும் 2 ஆயிரம் டன் குப்பையில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறார்கள். கோவையில் தினமும் 800 டன் குப்பை சேகரம் ஆகிறது. இதில், 400 டன் மறுசுழற்சிக்கு உதவாது. எனவே, மீதமுள்ள 400 டன் குப்பையை எரித்து அதிலிருந்து தினமும் குறைந்தபட்சம் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல், அனைத்து மாநகராட்சி மற்றும் தனியார் கட்டடங்களில் சோலார் பிளான்ட் அமைத்து சூரியஒளி மின்சாரம் தயாரிக்கவும் திட்டம் உள்ளது.

மழை பெய்ய வேண்டுமென்றால் நகரை பசுமையாக்க வேண்டும். இதற்காக, தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து வார்டுகள் தோறும் பல லட்சம் மரக்கன்றுகளை நடுதல், சாலையின் இருபக்கமும், சென்டர் மீடியன் பகுதியில் பசுமையாக புற்களை நட்டு, பராமரிக்கவும் திட்டம் உள்ளது. மாநகரில் உள்ள 8 குளங்கள், நீர்வரத்து பாதை, சங்கனூர் ஓடை ஆகியவற்றை சீரமைத்து தண்ணீர் தேக்கப்படும். குளக்கரையை பலப்படுத்தி, அதில், மக்கள் வாக்கிங் செல்ல ஏதுவாக ஏற்பாடு செய்யப்படும். 24 மணி நேர குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொலைநோக்கு பார்வையுடன், சிங்கப்பூர் நாட்டில் அமல்படுத்துவதுபோலவே கோவையிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, புதிய மாநகர மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க, தனி படிவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டு அலுவலகம் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து குறிப்பிட்டால், மேம்பாட்டு திட்டத்தில் சேர்க்கப்படும்.இவ்வாறு மேயர் கூறினார். பேட்டியின்போது, கமிஷனர் லதா, துணை கமிஷனர் சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.
 


Page 23 of 66