Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பைத் தொட்டியில் குப்பையை எளிதாகக் கொட்ட சாய்வுதள வசதி

Print PDF

தினமணி         13.05.2013

குப்பைத் தொட்டியில் குப்பையை எளிதாகக் கொட்ட சாய்வுதள வசதி

குப்பைத் தொட்டியில் குப்பையை எளிமையாக கொட்டுவதற்கு குப்பை தொட்டிக்கு நிகராக சாய்வுதள வசதியை பணியாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

குப்பைத் தொட்டியில் குப்பையை எளிமையாக கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிக்கு நிகராக சாய்வுதள வசதியை பணியாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாளொன்றுக்கு 6 முதல் 7 டன் வரை குப்பை சேருகிறது. இங்கு சேரும் அனைத்து குப்பைகளையும் சேகரிக்கும் இடம் பல்லவன் சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ளது. மருத்துவமனையில் சேரும் குப்பையை ஒரு இடத்தில் கொட்டிய பிறகு மாநகராட்சியின் குப்பை லாரியில் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. இந்த முறையினால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் வேலைப் பளு மற்றும் செலவும் அதிகமாக இருந்தது. குப்பையை கீழே சேமித்து வைப்பதற்கு பதிலாக 10 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பையை குப்பைத் தொட்டியில் தூக்கிக் கொட்டுவது சிரமமாக இருந்தது.

இப்போது குப்பைத் தொட்டிக்கு ஏற்ப பெரிய சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாய்வு தளத்தின் அருகில் 5 குப்பைத் தொட்டிகளை வைக்க முடியும். அதுபோன்று இரண்டு சாய்வு தளங்கள் அமைத்து குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

இதனால், குப்பை கொட்டுவது எளிதாவதுடன் குப்பை லாரிகள் வந்து குப்பை எடுத்துச் செல்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் வே.கனகசபை கூறியது: மருத்துவமனையில் அதிகமாக குப்பை சேர்வதால் குப்பை அள்ளுவதில் சிரமம் ஏற்பட்டது.

அதனால், மாநகராட்சியில் இருந்து 10 குப்பைத் தொட்டிகள் பெறப்பட்டு அதில் குப்பை கொட்டுவதற்கு வசதியாக சாய்வுதள அமைப்பு ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிறிய குப்பை வண்டிகளை அதில் இழுத்துச் சென்று குப்பைகளைக் எளிதாக கொட்ட முடியும்.

மேலும் 10 குப்பைத் தொட்டிகளை மாநகராட்சியிடம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.

 

தமிழகத்தில் முதல் முறையாக ஆற்காடு நகராட்சியில் காய்கனி கழிவில் இருந்து மின் உற்பத்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் துவக்கிவைத்தார்

Print PDF

தினகரன்         10.05.2013

தமிழகத்தில் முதல் முறையாக ஆற்காடு நகராட்சியில் காய்கனி கழிவில் இருந்து மின் உற்பத்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் துவக்கிவைத்தார்


ஆற்காடு, : தமிழகத்தில் முதல் முறையாக, ஆற்காடு நகராட்சியில், காய்கனி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார்.

தேவையான அளவுக்கு தமிழகத்தில் மின் உற்பத்தியில்லாமல் இதுவரை சந்திக்காத அளவுக்கு தமிழக மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மின் தடையை சந்தித்து வருகிறார்கள். இன்றைக்கு காற்றாலை மற்றும் சூரிய மின் சக்திமூலமும் நம் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தவகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காய்கனி கழிவுகளில் மின் உற்பத்தியை தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆற்காடு நகராட்சி, அண்ணாநகர் அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காய்கனி கழிவுகளில் இருந்து பயோகேஸ் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்ட கட்டுமானப்பணிகள், பொதுமக்கள் பங்களிப்போடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கட்டுமானப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சோதனை உற்பத்தி நடந்தது. இந்த திட்டம் வெற்றி பெற்றதையொட்டி மின் உற்பத்தி தொடக்க விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. திட்டத்தை சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

ஆற்காட்டில் நடந்த விழாவுக்கு வி.கே.ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ஆர்.புருஷோத்தமன், துணைத்தலைவர் எஸ்.கீதாசுந்தர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் செ.பாரிஜாதம் வரவேற்றார். வேலூர் மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் குத்துவிளக்கு ஏற்றி, மின் உற்பத்திக்கான சுவிட்சை ஆன் செய்தார். அதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விளக்குகள் எரிந்தன.

இதுகுறித்து கலெக்டர் பொ.சங்கர் விடுத்துள்ள அறிக்கை:

இந்த திட்டத்தின் மூலம் தினசரி 265 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, 4 வார்டுகளில் உள்ள தெரு விளக்குகள் எரிய வைக்கப்படும். மேலும், நகராட்சி பகுதியில் உள்ள காய்கனி கழிவுகள், ஓட்டல் உணவு கழிவுகளையும் பயன்படுத்துவார்கள்.

இந்த கழிவுகள் ஏற்கனவே நகராட்சி சார்பில் தனியார் மூலம் அகற்றப்பட்டு வந்தது. இதற்கு ஆண்டுக்கு நகராட்சி ரூ.7.86 லட்சம் செலவு செய்தது. மேலும், 4 வார்டுகளிலும் தெரு விளக்குகள் எரிய ஆண்டுக்கு ரூ.5.24 லட்சம் மின்கட்டணம் செலுத்தி வந்தது. மொத்தம் ரூ.13.10 லட்சம் வரை செலவு செய்தது.

இந்த புதிய மின் உற்பத்தி திட்டத்திற்கு ஆண்டுக்கு நகராட்சி சார்பில் ரூ.4.8 லட்சம் மட்டும் செலவு ஆகும். இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.9.2 லட்சம் நிகர லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விழாவில் ஒன்றியக்குழு தலைவர்கள் தாஜ்புரா எம்.குட்டி, சி.மூர்த்தி, மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, மகாலட்சுமி நர்சிங் கல்லூரி தாளாளர் டி.எல்.பாலாஜி, சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் டி.தரணிபதி, ஜிவிசி கல்லூரி தலைவர் வக்கீல் துரைசாமி, அதிமுக நிர்வாகிகள் எம்.சங்கர், ஏ.ஜி.பிச்சை முத்து, ஏ.காந்தி, சுமிதாவேல் முருகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மக்கள் தொடர்பு அலுவலர் பாலசக்திதாசன் தொகுத்து வழங்கினார்.

 

"குப்பையில் இருந்து மின்சாரம்: ரூ. 55 கோடியில் திட்டம்'

Print PDF
தினமணி       09.05.2013

"குப்பையில் இருந்து மின்சாரம்:  ரூ. 55 கோடியில் திட்டம்'


திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ரூ. 55 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளதாக மேயர் விஜிலா சத்தியானந்த் புதன்கிழமை தெரிவித்தார்.

 இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

 மாநகராட்சிப் பகுதியில் தினமும் 150 டன் குப்பை சேருகிறது. இதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ரூ. 55 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இத் திட்டத்தை முன்னோடித் திட்டமாக முதல்வர் அறிவித்துள்ளார்.

 தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் இத் திட்டத்தின் மூலம் 5 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். இத் திட்டத்துக்காக ராமையன்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் 5 சென்ட் நிலம் வழங்கப்படும்.

 மேலும் காய்கனிக் கழிவுகள் போன்றவற்றில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டம் ரூ. 1 கோடியில்
செயல்படுத்தப்படவுள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் எரிவாயு மூலம் 750 தெருவிளக்குகள் வரை எரிய வைக்க முடியும்.

 மாநகராட்சிப் பகுதியில் உள்ள சோடியம் விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளையும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 6 நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளன. மாநகராட்சி இப்போது மாதம் ரூ. 60 லட்சம் மின் கட்டணமாக செலுத்தி வருகிறது. மேலும் மாதாந்திர பராமரிப்புச் செலவு ரூ. 12 லட்சம் ஆகும். மின் விளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும்போது மின் கட்டணத்தில் 30 முதல் 40 சதவீதம் குறையும்.

 மாநகராட்சிப் பகுதியில் 2-ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக தனியார் கலந்தாலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த வாரத்துக்குள் இறுதித் திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையரிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

 இத் திட்டத்துக்கு ரூ. 460 கோடி தேவைப்படும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந் நிதியைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

 இதில் 20 சதவீத நிதியை அரசிடம் இருந்து கேட்க முடிவு செய்துள்ளோம். தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தில் இருந்தும் நிதி கோரியுள்ளோம். ரூ. 60 கோடி வரை அத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் மேயர்.
 


Page 26 of 66