Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

6 இடங்களில் கட்டட இடிபாடுகளை கொட்ட மாநகராட்சி அனுமத

Print PDF
தினமணி       10.04.2013

6 இடங்களில் கட்டட இடிபாடுகளை கொட்ட மாநகராட்சி அனுமத


கோவை மாநகராட்சிப் பகுதியில் 6 இடங்களில் கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதற்கு மாநகராட்சி அனுமதித்துள்ளது. வேறு இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் க.லதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகராட்சிப் பகுதியில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு புதிய குடியிருப்புப் பகுதிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பழைய கட்டடங்களைப் புதுப்பித்தல் மற்றும் புதிய குடியிருப்புகளை உருவாக்குவதன் காரணமாக ஏற்படும் கட்டடக் கழிவுகள் பெரும்பாலும் குளக்கரைகளிலும் சாலையோரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் கொட்டப்படுகின்றன.

இதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதுடன் நீரின் தன்மையும் மாசுபடுகிறது. கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சிப் பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்கும் பொருட்டு மாநகராட்சிப் பகுதிகளில் கழிவாகும் கட்டட இடிபாடுகளை சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டும் கொட்ட வேண்டும். இதை மீறி குளக்கரைகளிலோ சாலையோரங்களிலோ குப்பைத் தொட்டிகளிலோ கட்டடக் கழிவுகளைக் கொட்டினால் உடனடியாக அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

வார்டு எண். 87-இல் பாரதி நகர் கிணறு, 93-இல் மாரியம்மன் கோவில் கிணறு, 97-இல் அன்னை இந்திரா நகர் கிணறு, 100-இல் ரங்கநாதபுரம் கல்லுக்குழி, 8-இல் கவுண்டம்பாளையம் பி அன்ட் டி காலனி, 16-இல் வடவள்ளி மருதாபுரம் நால்வர் நகர் பகுதி ஆகிய 6 இடங்களில் மட்டும் கட்டட இடிபாடுகளைக் கொட்ட வேண்டும்.
 

பள்ளிபாளையம் நகராட்சிக்கு 5 டன் குப்பை ஈரோட்டில் இருந்து தினமும் வழங்க முடிவு?

Print PDF
தினமலர்        09.04.2013

பள்ளிபாளையம் நகராட்சிக்கு 5 டன் குப்பை ஈரோட்டில் இருந்து தினமும் வழங்க முடிவு?

ஈரோடு: பள்ளிபாளையம் நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரம் தயாரிக்க, ஈரோடு மாநகராட்சியிடம், நாள்தோறும், 5 டன் குப்பை கழிவுகளை விலைக்கு வாங்கிட கோரியுள்ளது. மன்றத்தின் ஒப்புதல் பெற்றதும் வழங்கப்படும், என துணை மேயர் பழனிச்சாமி தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்ந்தப்பட்ட பின், 109.52 சதுர கி.மீ., பரப்பளவுடன், நான்கு மண்டலங்கள், 60 வார்டுகளுடன் உள்ளன. மாநகராட்சி பகுதியில் இருந்து தினமும், 300 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த ஈரோடு நகர் பகுதி, சூரம்பட்டி, காசிபாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.

சூரியம்பாளையம், பெரியசேமூர், வீரப்பன்சத்திரம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், வைராபாளையம் சுடுகாட்டினை ஒட்டிய, காவிரி கரையோரம் கொட்டி வருகின்றனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழாக, வெண்டிபாளையம் குப்பை கிடங்கில், தினமும், 150 டன் உரங்கள் தயாரிக்கின்றனர். வைராபாளையம் பகுதியில் திடக்கழிவு திட்டத்துக்காக, உள்கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கும் பணிக்காக, ஈரோடு மாநகராட்சியிடம் இருந்து, நாள்தோறும், 5 டன் குப்பையை வாங்கி அனுமதி கோரியுள்ளனர்.

இதுபற்றி துணைமேயர் பழனிச்சாமி கூறியதாவது:

பள்ளிபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் உரம் தயாரித்திட, போதுமானதாக குப்பை கழிவுகள் இல்லை.

இதனால், குப்பைகள் வீணாகி வருகிறது. எனவே, அருகில் உள்ள ஈரோடு மாநகராட்சியிடம், தினமும், 5 டன் குப்பை கழிவுகளை வாங்கி, இரண்டையும் சேர்த்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ள, குப்பை கேட்டுள்ளனர்.

பணியாளர் கூலி, குப்பையை வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்படும் செலவுகளை திட்டமிட்டு, மன்றத்தில் ஒப்புதல் பெற்றபின், பள்ளிபாளையம் நகராட்சிக்கு வழங்கப்படும். தவிர, வைராபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - 2, விரைவில் செயல்படவுள்ளதால், சேகரிக்கப்படும் கழிவுகள், நமக்கே சரியாக இருக்கும், என்றார்.
 

மாநகராட்சியில் ரூ.3.66 கோடிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த அறிக்கை தயாரிப்பு

Print PDF
தினகரன்       08.04.2013

மாநகராட்சியில் ரூ.3.66 கோடிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த அறிக்கை தயாரிப்பு


ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.3.66 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அனுமதி பெற்ற பிறகு விரைவில் புதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமான வெண்டிபாளையம், வைராபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளில் சேகரிக்கப்படுகிறது.

அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக தயாரிக்கப்படுகிறது. மாநகராட்சி பழைய வார்டுகளில் இருந்து தினசரி 100 டன் குப்பைசேகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட்ட நிலையில் தினசரி 250 டன் முதல் 300 டன் வரை குப்பைசேகரிக்கப்பட்டு வருகிறது.

குப்பைகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் போதிய துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் குப்பை அள்ள போதிய வாகனங்கள் இல்லாத நிலையில் இருந்து வந்தது.

இதையடுத்து, கடந்த 2011-12ம்நிதியாண்டில் திடக்கழிவு மேலாண்மை பணியினை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் 5 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டது. இந்த நிதியை கொண்டு 4 டம்பிளேசர் வாகனங்கள், 5 டிரைலர்கள், 2 மண் நிரப்பும் மற்றும் மண் அள்ளும் வாகனங்கள், 110 இரும்பு குப்பை கலன்கள், 10 கொசுஒழிப்பு புகை மருந்து கருவிகள், 10 கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பானகள், தள்ளுவண்டி வாங்கப்பட்டுள்ளது.  

மேலும், வைராபாளையத்தில் உள்ள உரக்கிடங்கிற்கு அதிக அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருவதால் அங்கு புதிதாக விண்ட்ரோஸ் உரமேடை, வாகனங்கள் செல்லும் வகையில் அணுகுசாலை போன்ற பணிகளும் நடந்து வருகிறது. மாநகராட்சி பரப்பளவு அதிகமாக உள்ளதால் நீண்ட தூரத்தில் இருந்து குப்பைகளை கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் 2012-13ம்நிதியாண்டில் கூடுதலாக ஒருகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி புதிதாக 125 குப்பை கலன்கள், 122 தள்ளுவண்டிகள், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ஜெட்ராடிங் இயந்திரங்கள் வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் கூடுதலாக வாகனங்கள், உபகரணங்கள் வாங்குவதற்காகவும் 3 கோடியே 66 லட்ச ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு புதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மாநகராட்சி ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் குப்பைகள் அதிகமாக உள்ளது. குப்பைகளை அள்ள ஏற்கனவே வாங்கப்பட்ட வாகனங்கள் பழைய நிலையில் உள்ளதால் புதியதாக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்காக 3.66 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி பெற்ற பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்றார்.
 


Page 29 of 66