Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் விநியோகம் செய்ய மறுத்தால் லாரிகள் பறிமுதல்:

Print PDF

தினமணி 05.05.2010

குடிநீர் விநியோகம் செய்ய மறுத்தால் லாரிகள் பறிமுதல்: அமைச்சர்

பெங்களூர், மே 4: பெங்களூர் நகரில் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க குடிநீர் வாரியத்துடன் ஒத்துழைப்பு அளிக்காத தனியார் தண்ணீர் லாரிகள் பறிமுதல்செய்யப்படும் என்று நகர குடிநீர் விநியோகத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை காலை முதல்வர் எடியூரப்பாவுடன் லால்பாக் பூங்காவை பார்வையிட்ட அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு நிருபர்களிடம் கூறியது:

நகருடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதற்காக தேவையான அளவு லாரிகளை குடிநீர் வாரியம் வாடகைக்கு அமர்த்தியுள்ளது. ஒரு நாளைக்கு 5 முறை தண்ணீர் எடுத்துச் சென்று விநியோகிக்க வேண்டும்.

இதற்காக ஒருநாளைக்கு ரூ.1600 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த லாரிகளுக்கு தண்ணீரை குடிநீர் வாரியம் சப்ளை செய்யும். லாரி டிரைவர்கள் தண்ணீரை வாரியம் குறிப்பிடும் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்க வேண்டும்.

இதற்கு மறுப்புத் தெரிவிப்பது, அதிக கட்டணம் கேட்பது சரியானது அல்ல. மக்களின் தண்ணீர் பிரச்னை இது. இதில் வாரியத்துடன் தனியார் லாரி உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த வேண்டுகோளை மீறி தனியார் லாரிகள் தண்ணீர் விநியோகம் செய்ய மறுத்தால் அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.

இதுதொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரின் எல்லா பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், சேமிக்கவும் சில நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் பல்வேறு பகுதிகளில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மூடினால் 10 சதவிகித தண்ணீர் மிச்சமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காலத்தில் ஏராளமான தண்ணீர் காட்டாறாக பாய்ந்து ஓடி வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை பெங்களூர் நகருக்குத் திருப்பம் திட்டம் உள்ளது.

மேலும் நகரில் ஆண்டுக்கு 70 நாட்கள் மழை பெய்கிறது. இவ்வாறு பெய்யும் மழை நீரை சேமித்தாலே 10 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இதற்காக நகரின் 4 புறங்களிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சேமிக்கப்படும் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்த முடியும். இதுவெல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூர் நகரின் குடிநீர் பற்றாக்குறை நிரந்தரமாகத் தீரும்.

24 மணி நேர குடிநீர்: நகரில் உள்ள 10 வார்டுகளுக்கு 24 மணி நேர குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடும். நகரில் சேதமடைந்த கழிவுநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

Last Updated on Wednesday, 05 May 2010 10:34