Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் பிரச்னை அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை

Print PDF

தினமணி 06.05.2010

ஒகேனக்கல் பிரச்னை அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை

பெங்களூர், மே 5: ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக தமிழக அரசு தலைமைச் செயலாளருடன் கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

அவர் பெங்களூரில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியது: கர்நாடகத்தில் சிவனசமுத்திரம் நீர் வீழ்ச்சியில் மின் உற்பத்தி திட்டத்தைத் துவக்க வேண்டும் என்று கர்நாடகம் தீர்மானித்துள்ளது.

ஆனால் இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நீண்ட காலமாக அத்திட்டம் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் அத்திட்டத்தை துவக்க இப்போது கர்நாடகம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில்தான் ஒகேனக்கலில் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை துவக்கியுள்ளது. இரு மாநிலங்களிடையே இப்போது உள்ள நல்லுறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே கர்நாடகத்தின் விருப்பமாகும். எனவே, இவ்விரு திட்டங்கள் தொடர்பாக முதல்கட்டமாக அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தற்போது தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அக் கூட்டம் முடிவடைந்ததும், தமிழக அரசு தலைமைச் செயலாளருடன் கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் எஸ்.வி. ரங்கநாத் பேச்சுவார்த்தை நடத்துவார்.

பிரதமருடன் எம்.பி.க்கள் சந்திப்பு: இதற்கிடையே ஒகேனக்கலில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் குடிநீர்த் திட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதன்கிழமை தில்லியில்

பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக பாஜக எம்பிக்கள் அனந்தகுமார் தலைமையில் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது ஒகேனக்கலில் சர்ச்சைக்குரிய இடத்தில் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை துவக்கியுள்ளது குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விவாதித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். எதையும் அவசரப்பட்டு செய்துவிட முடியாது. இதனால் ஒவ்வொரு நடவடிக்கையாக கர்நாடகம் எடுத்து வருகிறது என்றார்.