Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்த் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்

Print PDF

தினமணி       18.05.2010

குடிநீர்த் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்

திருச்சி, மே 17:திருச்சி மாநகராட்சியில் ரூ. 169 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை, போர்க்கால அடிப்படையில் விரைவாக முடிக்க வேண்டும் எனப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் அறிவுறுத்தினர்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில், ரூ. 169 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் 8 தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தில் மேலூர்- கொள்ளிடக் கரையோரம் 3 இடங்களில் பிரதான குடிநீர் சேகரிப்புக் கிணறு கட்டுமானப் பணிகளும், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளும், உந்துநீர் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கலந்தறிதற்குரிய நிறுவனப் பிரதிநிதிளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, திங்கள்கிழமை காலை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் பணிகளின் முன்னேற்றம் பற்றி நேராய்வு செய்தனர். அப்போது, பணிகளை ஏற்கெனவே குறிப்பிட்ட காலத்துக்குள், போர்க்கால அடிப்படையில் முடிக்க பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களை அவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, உதவி ஆணையர் பெ. பாஸ்கரன், உதவி நிர்வாகப் பொறியாளர் என். பாலகுருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.