Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்த காலத்துக்கு முன்பே நிறைவேறும்

Print PDF

தினகரன்          18.05.2010

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்த காலத்துக்கு முன்பே நிறைவேறும்

தர்மபுரி, மே 18:

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்வதற்காகவும், பென்னாகரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறவும் துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை பென்னாகரம் வந்தார்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மடம் பகுதியில் பெரிய சமநிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி, நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடம், தலைமை நீரேற்று நிலையம் ஆகிய இடங்களை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் பதிக்கும் பணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆய்வுக்கு பின் நிருபர்களிடம் துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 30 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1,334 கோடி ஒப்புதல் பெறப்பட்டு திருத்திய மதிப்பீடாக ரூ.1,928 கோடியில் பணியை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 5 தொகுப்புகளாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் தொகுப்புக்கான முக்கிய பணிகள் டெண்டர் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. ரூ.63.67 கோடி மதிப்பில் முதல் கட்ட முக்கிய பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும்.

ஒகேனக்கல் திட்ட பணிகளை 30 மாதங்களில் முடிக்க திட்டமிட்டோம். 24 மாதங்களில் விரைந்து முடிக்கும் அளவுக்கு பணிகள் வேகமாக நடக்கிறது. 2 முதல் 5 தொகுப்பு பணிகளில் பைப் லைன் அமைப்பது உட்பட முக்கிய பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு ஜூன் இறுதியில் இறுதி செய்யப்படும். 24 மாதத்தில் இந்தப் பணிகளும் நிறைவேறும். 2012ம் ஆண்டு டிசம்பரில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முடியும். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்த காலத்திற்கு முன்பு எப்படி நிறைவேற்றப்பட்டதோ அதேபோல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் குறித்த காலத்திற்கு முன்பே நிறைவேற்றப்படும். இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். கர்நாடக அரசியல்வாதிகள், அரசியலுக்காக உண்மைக்கு மாறான தகவல்களை கூறுகின்றனர். இந்த திட்டத்திற்காக ஒகேனக்கல்லில் இருந்து 2.7 டிஎம்சி நீர் எடுக்க போவதாக கூறுகின்றனர். ஆனால், 1.4 டிஎம்சி நீரை பயன்படுத்தத்தான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் ஒப்புதலை பெற்று தான் மாநில அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழக எல்லையில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எந்த வரம்பு மீறலும், எல்லை மீறலும் இல்லை. இவ்வாறு துணை முதல்வர் கூறினார்.