Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடலூரில் குளோரின் கலந்து குடிநீர் விநியோகம்

Print PDF

தினமணி    28.05.2010

கூடலூரில் குளோரின் கலந்து குடிநீர் விநியோகம்

கம்பம், மே 27: தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் முறையாகக் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா? என்று நகராட்சி சார்பில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் முறையாகக் குளோரின் கலக்காமல் விநியோகம் செய்ததால் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு 5 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

குடிநீரில் குளோரின் முறையாகக் கலக்கப்படுவதை உள்ளாட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கூடலூர் நகராட்சிக்கு லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

வயிற்றுப் போக்கு, தொற்று நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேல்நிலை, தரைதள தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கடைசிப் பகுதியில் 0.2 பி.பி.எம். அளவு இருக்கும் வகையில் குளோரின் கலக்கப்படுகிறது. நகரில் அனைத்து ஸ்கவர் வால்வுகளும் இயக்கப்பட்டு கசடு நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது, குடிநீரில் குளோரின் முறையாகக் கலக்கப்பட்டுள்ளதா என தனிக் குழுக்கள் வீடுகள், தெருக் குழாய்களில் ஆய்வு செய்து வருவதாக நகராட்சி நிர்வாக அலுவலர் வெற்றி அரசு தெரிவித்தார்.