Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூருக்கு காவிரி நீர்: அரசு பரிசீலனை: மேயர் தகவல்

Print PDF

தினமணி 01.06.2010

வேலூருக்கு காவிரி நீர்: அரசு பரிசீலனை: மேயர் தகவல்

வேலூர், மே 31: வேலூர் மாநகருக்கு மேட்டூரிலிருந்து காவிரி நீர் கொண்டுவரும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மேயர் ப.கார்த்திகேயன் தெரிவித்தார். திங்கள்கிழமை நடைபெற்ற வேலூர் மாமன்ற அவசரக் கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.

உறுப்பினர்களின் பேச்சு விவரம்:

சீனுவாசகாந்தி (காங்.): நகரில் புதை சாக்கடைக்கு தோண்டப்படும் பள்ளங்கள் சரிவர மூடப்படுவது இல்லை. காலாவதி உணவுப் பொருள்களை சோதனை நடத்தி கைப்பற்றி அழித்து வரும் அதிகாரிகள் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பாமாயில்களை ஆய்வு செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் ஒரு காபியின் விலை ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அசேன் (திமுக): வேலூர் நகர மக்களின் குடிநீர்ப் பிரச்னை என்று தீரும்? ஓகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்படுமா, மேட்டூர் கூட்டு குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதா? மக்கான் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காலதாமதமாகிறது. இதை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

பாலசுந்தரம் (தேமுதிக): தண்ணீர் விநியோகம் சரிவர இல்லாததைக் கண்டித்து வார்டு மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன்.

கோபி (மதிமுக): மாநகரில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் படித்திருந்தால்தான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதாக பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன. இதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். படிக்காதவர்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாதா? இந்த அவலநிலையைப் போக்க மாமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் அளித்த பதில்:

புதை சாக்கடை திட்டம் நிறைவு பெறும் வரை குறைகள் ஆங்காங்கே இருக்கும். இதுநாளடைவில் சரிசெய்யப்படும். பாமாயில் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய பேருந்து நிலையத்தில் காபியை அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யும் கடைகள் மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

வேலூர் மாநகருக்கு விரைவில் மேட்டூர் கூட்டுகுடிநீர்த் திட்டம் கொண்டு வரப்படும். இரவுக் காவலர் விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கொண்டுவரப்படும். பள்ளி நிர்வாகங்கள் மீது கூறப்படும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.