Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.85லட்சம் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணி 6 மாதத்தில் நிறைவடையும்

Print PDF

தினகரன் 03.06.2010

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.85லட்சம் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணி 6 மாதத்தில் நிறைவடையும்

கரூர், ஜூன் 3: புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு ரூ.85லட்சம் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவைக்கு தவிட்டுப்பாளையம் அருகே காவிரியாற்றில் ஏற்கனவே குடிநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்ததையொட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குறைந்தபட்ச தேவை திட்டத்தின்கீழ் புதியதாக ரூ.84.5 லட்சம் மதிப்பில் பல்வேறு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதில், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுகிறது. இதன் மூலம் பேரூராட்சியின் 12, 13, 14, 15 வார்டுகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும்.

மேலும் இதே திட்டத்தில் ஒரத்தையூர் மின் மோட்டார் அறையில் ஏற்கனவே உள்ள 7.5 எச்பி மோட்டாருக்கு பதில் புதியதாக 15 எச்பி மின் மோட்டார் பொருத்தப்படுகிறது. 8, 9வார்டுக்கு உட்பட்ட சேங்கல்பாளையம், மூர்த்திபாளையம், கணபதி பாளையம், மேலஒரத்தை, கீழ் ஒரத்தை, ஆவாரங்காட்டுபுதூர், மூனூட்டுப்பாளையம் ஆகிய பகுதி யினரின் குடிநீர் தேவையை பூர்த்தி அடையும்.

மேலும், தவிட்டுபாளையத்தில் இருந்து ஒரத்தை வரை குடிநீர் விநியோகத்துக்காக பதிக்கப்பட்டுள்ள 4இன்ச் அகலம் கொண்ட குடிநீர் குழாய்களுக்கு பதிலாக 8இன்ச் அகலம் கொண்ட குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

தவிட்டுப்பாளையத்தில் கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமான பணிக்கான தொடக்க விழா நேற்று நடந்தது.

இதில், பேரூராட்சி தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் ரமேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிவடையும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.