Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலத்தில் ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்: சரிசெய்ய மேலும் இரண்டு நாள்கள் ஆகும்

Print PDF

தினமணி 11.06.2010

சேலத்தில் ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்: சரிசெய்ய மேலும் இரண்டு நாள்கள் ஆகும்

சேலம், ஜூன் 10: சேலம் ஐந்து ரோடு, சாரதா கல்லூரி சாலை பகுதியில் சாலையில் பெருக்கெடுக்கும் குடிநீரை சரி செய்ய மேலும் இரண்டு நாள்கள் ஆகும் என்று, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேட்டூரில் இருந்து ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த பிரதான குடிநீர் குழாயில் இருந்துதான் சேலம் மாநகருக்கும் தினசரி சுமார் 6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த பிரதான குழாய் சேலம் 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை வழியாகச் செல்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இது நாளடைவில் பெரிதாகிக் கொண்டே வந்து இதில் இருந்து அதிகளவில் குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்தது.

பிரதான குழாய் என்பதால் அதிக அழுத்தத்துடன் ஏராளமான அளவு தண்ணீர் வெளியேறி வீணாக சாக்கடையில் கலந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்குத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வியாழக்கிழமை குடிநீர் அதிகளவில் வெளியேறுவதைத் தடுக்காமல், மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் வெளியேறுவதை யாரும் அறிந்திராமல் மறைக்கும் விதமாக தனியாக குழாய் அமைத்து சாக்கடையில் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில் ஏற்கெனவே 15 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலப்பதால் காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவி அவற்றுக்காக அரசு சிறப்பு முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில் குடிநீர் வெளியேற்றத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தண்ணீர் வெளியேறுவது குறித்து பொதுமக்கள் ஏற்கெனவே தகவல் தெரிவித்தனர். ஆனால் அது பிரதான குழாய் என்பதால் அதில் பழுதுபார்க்கும் பணியைத் தொடங்கினால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும். மேலும் பணி முடிவடையவும் ஓரிரு நாள்கள் ஆகும். அத்துடன் மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டியது வரும். அடுத்த இரண்டு நாள்களில் மாதாந்திர மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அந்த நாளில் பழுதுபார்க்கும் பணியை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை அப்பகுதி மக்கள் பிடித்துச் சென்று பயன்படுத்தி வருகின்றனர்.