Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய குடிநீர் இணைப்பு பெறும் எளிய நடைமுறை இயக்குனர் உத்தரவை கண்டுகொள்ளாத நகராட்சிகள்

Print PDF

தினமலர் 15.06.2010

புதிய குடிநீர் இணைப்பு பெறும் எளிய நடைமுறை இயக்குனர் உத்தரவை கண்டுகொள்ளாத நகராட்சிகள்

சிவகாசி : புதிய குடிநீர் இணைப்பு பெற எளிய நடைமுறைகளை வகுத்து அதை பின்பற்ற நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரின் உத்தரவை பல நகராட்சிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெறுவதில் மக்களின் சிரமம் தீரவில்லை. மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பினால் சீனியாரிட்டி, டெபாசிட், ரோடு கட்டிங், ஆபீஸ் செலவு என பிரிவு வாரியாக கேட்கும் தொகை செலவிட வேண்டும். நகராட்சி அடையாளம் காட்டும் பிளம்பர் மூலமே குழாய் இணைப்பு வேலை செய்ய வேண்டும். இவர் தரமில்லாத பொருட்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்தாலும், வீட்டு உரிமையாளர் கேள்வி கேட்காமல் பணத்தை எண்ணிக்கொடுக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு 10,000 முதல் 20,000 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்பவர்கள் தான் குடிநீர் இணைப்பு பெறமுடியும் என்ற நிலைமை இருந்தது. இச்சூழ்நிலையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், குடிநீர் இணைப்பு பெறும் நடைமுறைகளை எளிமையாக்கி 2009 செப்., 21ல் உத்தரவு பிறப்பித்தார்.

அதில் மாநகராட்சி, நகராட்சிகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும். இணைப்பு வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

புதிய வழிமுறைகள்:

புதிய குடிநீர் இணைப்புக்கான படிவம், தகவல் மையத்தில் இலவசமாக வழங்கவும், இப்படிவத்தில் டெபாசிட் கட்டணத்தில் வீட்டு பயன்பாடு, வீட்டு பயன்பாடு அல்லாதவை, சொத்துவரி நிலுவைத் தொகை, நகராட்சிக்கு செலுத்தும் கட்டணங்களில் (ரோடு கட்டிங்) 30 மீட்டர் நீளத்திற்கு கருங்கல் ஜல்லி ரோடாக இருந்தால் 1,050 ரூபாய், தார் ரோட்டிற்கு 2,250, சிமென்ட் ரோட்டிற்கு 2,600, 30 மீட்டர் முதல் 90 மீட்டர் நீளம் வரை கருங்கல் ஜல்லி ரோட்டிற்கு 1,650, தார்ரோட்டிற்கு 2,850, சிமென்ட் ரோட்டிற்கு 3200 ரூபாய் என நகராட்சி துணை விதிப்படி மேற்பார்வை கட்டணம், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை குறிப்பிட வேண்டும். மொத்த செலவு விபரத்தை நகராட்சி தகவல் பலகை, வசூல் மையத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்.

 விண்ணப்பத்தின் சீனியாரிட்டியை உடனே இணையதளத்தில் வெளியிட வேண்டும். விண்ணப்பதாரர் புதிய குடிநீர் இணைப்பிற்கு தேவையான குழாய்களை பதித்து விட்டு, மாநகராட்சி, நகராட்சி பொறியாளரிடம் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பதாரரிடம் இருந்து முறையான தகவல் பெற்றவுடன், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்து, புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இந்நடைமுறையால் அதிகாரிகளை சந்திக்கும் நேரம் குறைந்து தவறு நடக்க வாய்ப்பு ஏற்படாது என தெரிவித்து இருந்தார். உத்தரவு பிறப்பித்து பத்து மாதங்களாகியும், நகராட்சிகள் நிர்வாக இயக்குனரின் உத்தரவை பல நகராட்சிகள் பின்பற்றவில்லை. குடிநீர் இணைப்பிற்கான செலவின விபரங்களை குறிப்பிட்டு தகவல் மையத்தில் விளம்பரம் செய்யவில்லை. வழக்கம் போல் நகராட்சி இன்ஜினியரிங் பிரிவில் அடையாளம் காட்டும் பிளம்பர் மூலமாக தான் குழாய் இணைப்பு வேலை நடக்கிறது. பிளம்பர் ஆபீஸ் செலவு, பொருட்கள் செலவு என கேட்கும் தொகையை கொடுக்க வேண்டியுள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவுகள் காற்றில் தான் பறக்கின்றன.

நடைமுறைப்படுத்த வேண்டிய உள்ளூர் அதிகாரிகள் சிலரின் அலட்சியத்தால் மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதில் சிரமம் தொடர்கிறது. புதிய மின் இணைப்பிற்கு வீட்டு உரிமையாளரே எலக்ட்ரீசினை வைத்து வயரிங் செய்துவிட்டு, இணைப்புக்கு மட்டும் மின் வாரிய அதிகாரிகளை நாடும் நடைமுறையை போல் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதிலும் பின்பற்ற வேண்டும்.