Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்த் திட்டத்துக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 15.06.2010

குடிநீர்த் திட்டத்துக்கு எம்.எஸ். சுவாமிநாதன் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு

பழனி, ஜூன் 14: பழனியில் குடிநீர் மேம்பாட்டுக்காக மாநிலங்களவை எம்.பி.யான இயற்கை விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

பழனி நகரில் 25,26 மற்றும் 9-வது வார்டுகளில் கோடைக் காலங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில், ராஜா நகரில் சுமார் இரண்டு லட்சம் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டி ரூ. 17 லட்சம் செலவில் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் திட்டமிட்டது.

ஆனால், அதற்கான நிதி கிடைக்காததால் நீண்ட நாள்களாக திட்டம் தாமதமானது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, பழனி நகர்மன்றத் தலைவரும், 26-வது வார்டு உறுப்பினருமான இராஜமாணிக்கம், 25-வது வார்டு உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி கடிதம் அனுப்பினர். கவுன்சிலர் கந்தசாமி எம்.எஸ். சுவாமிநாதனை நேரில் சந்தித்து நிலைமை குறித்து விளக்கினார்.

இதையடுத்து, பழனி குடிநீர் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதாக கடந்த ஏப்ரல் 27-ம் தேதி எம்.எஸ். சுவாமிநாதன் கடிதம் கொடுத்துள்ளார்.

இக்கடிதம் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கடந்த மே 28-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு வந்துள்ளது.

பழனி நகரில் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, நகர்மன்றத் தலைவர், கவுன்சிலர் கந்தசாமி மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.