Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சியில் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை ரூ.2 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 17.06.2010

வேலூர் மாநகராட்சியில் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை ரூ.2 லட்சம் ஒதுக்கீடு

வேலூர், ஜூன் 17: வேலூர் மாநகராட்சியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வார்டுகளுக்கு 10&12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக வழங்கப்படும் தண்ணீரும் பொதுமக்களுக்கு முறையாக செல்லாததால் ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் நடக்கிறது.

மாநகராட்சிக்கு முக்கிய நீர் ஆதாரங்களான கருகம்பத்தூரில் தினமும் 2 லட்சம் லிட்டர், பொன்னையில் 15 லட்சம், ஓட்டேரியில் 5&8 லட்சம் லிட்டர் சப்ளை ஆகிறது. இதில் ஓட்டேரியில் நிலத்தடி நீர் பாதிப்பால் எதிர்பார்த்தபடி தண்ணீர் உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்கிருந்து நகருக்கு வந்து சேரும் தண்ணீரின் அளவில் வேறுபாடு இருக்கிறது. இதனால் வழியில் யாராவது தண்ணீரை திருடுகிறார்களா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் சப்ளை லைனை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் 10வது வார்டு பகுதியில் நேற்று வழங்கப்பட்ட குடிநீரில் கழிவு நீர் கலந்துவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த தண்ணீரை பாட்டிலில் பிடித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 32வது வார்டு ராமர் கோயில் பஜனை தெருவில் கடந்த 45 நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறி சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

தண்ணீர் கேட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதால் மேயர் கார்த்திகேயன், ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் நேற்று மாலை திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து இருவரும் கூறியதாவது:

வார்டுகளில் நிலவும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பைப்லைன் இல்லாத பகுதிகளுக்கு லாரி தண்ணீர் வழங்கப்படும்.

பொன்னையில் ரூ.10 லட்சம் மதிப்பில் 4 போர் வெல் போடும் பணி நடக்கிறது. இதில் 2 போர்வெல்லில் இருந்து நாளை (இன்று) முதல் தண்ணீர் சப்ளை செய்யப்படும். சார்பனாமேட்டில் 2 போர்வெல் போடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.