Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.276 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி 28.06.2010

ரூ.276 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணிகள் துவக்கம்

தர்மபுரி, ஜூன் 28: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 6,755 குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு 2008 பிப்ரவரி 25ம் தேதி தர்மபுரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டப் பணிகள், 5 பிரிவாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. முதல் பிரிவுக்கு ரூ.237.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கான இறைப்பான் கிணறு, நீர் சுத்திகரிப்பு நிலையம், மடம் கிராமத்தில் உள்ள பெரிய சமநிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தொகுப்பு&2 எனப்படும் 2வது பிரிவு பணிகள் ரூ.276 கோடி மதிப்பீட்டில் துவங்கியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், தொகுப்பு&1 பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இப்போது, தொகுப்பு&2 பணிகள் துவங்கியுள்ளன. இதில், மடம் கிராமத்தில் உள்ள பெரிய சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து ஊத்தங்கரை வரை 2,106 கி.மீ. தூரம் பிரதான குழாய்கள் மற்றும் நீர் கடத்தும் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது.

இக்குழாய்கள் மூலம் தர்மபுரி நகராட்சி மற்றும் பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி, மத்தூர் மற்றும் ஊத்தங்கரை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,698 ஊரகக் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பென்னாகரம், ஊத்தங்கரை ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு தேவையான குடிநீர் கொண்டு செல்லப்படும். தொகுப்பு&2 பணிகள் முடிந்த பின்னர், தொகுப்பு& 4க்கான பணிகள் தொடங்கும். அதற்கான மதிப்பீடு ரூ.475 கோடியாகும். இதற்கான ஒப்பந்தப்புள்ளி 28ம் தேதி (இன்று) கோரப்படுகிறது என்றனர்.