Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊட்டியில் ரூ.23 கோடியில் புதிய குடிநீர் திட்டம் நகர்மன்ற அனுமதிக்கு காத்திருப்பு

Print PDF

தினகரன் 29.06.2010

ஊட்டியில் ரூ.23 கோடியில் புதிய குடிநீர் திட்டம் நகர்மன்ற அனுமதிக்கு காத்திருப்பு

ஊட்டி, ஜூன் 29: ஊட்டி நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.23 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஊட்டி நகராட்சியில் 36 வார்டு உள்ளது. 2001ம் ஆண்டு கணக்கெடுப்புபடி 1 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 10 முதல் 15 ஆயிரம் வரை மக்கள்தொகை அதிகரித்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிக்கு பார்சன்ஸ்வேலி அணை யில் இருந்தே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் மார்லிமந்து, கிளண்ராக், அப்பர் மற்றும் லோவர் கோடப்பமந்து, அப்பர் மற்றும் லோவர் தொட்டபெட்டா, ஓல்டு ஊட்டி, கோரிசோலா, டைகர் ஹில் அணைகளில் இருந் தும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

பார்சன்ஸ்வேலி நீரேற்று மையத்தில் இருந்து 2 ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஊட்டி நகராட்சி உள்ளது. தற்போது ஒரு நபருக்கு 90 லிட்டர் வீதம் ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தினமும் 135 லிட்டர் நீர் விநியோகம் செய்ய வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு பார்சன்ஸ்வேலி அணையில் புதிய குடிநீர் திட்டத்தை உருவாக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான திட்ட மதிப்பு தயாரிக்க எஸ்.பி.டி. என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்நிறுவனம் ரூ.23 கோடியில் விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பார்சன்ஸ்வேலி அணையில் புதிதாக ஒரு பம்பிங் ஸ்டேஷன் கட்டப்படும். அதில் ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டு அணையில் இருந்து தண்ணீர் உறிஞ்சி குழாய்களின் மூலம் ஊட்டி நகர் பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள 2 பெரிய நீர் தேக்க தொட்டியில் சேகரித்த பின் வினியோகம் செய்யப்படும்.

தமிழ்நாடு மாநில அளவிலான ஓப்புதல் அளிக்கும் குழு ஊட்டி நகராட்சிக்கு மதிப்பீடு தொகையான ரூ.23 கோடியே 80 லட்சத்திற்கு அனுமதியளித்தது.

இதில், மாநில அரசின் மானியத்தொகை ரூ.7.14 கோடியில், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் கடன் ரூ.14.28 கோடி மற்றும் நகராட்சியின் பங்குதொகை ரூ.2.38 கோடியாகும். இத்திட்டம் நிறைவேறினால் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்காது.

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்புக்களுக்கான வைப்புத் தொகை மற்றும் குடிநீர் கட்டணங்களை உயர வாய்ப்புள்ளது. இத்திட்டம் நிறைவேற்றுவதற்காக இன்று ஊட்டியில் நடக்கும் நகராட்சி கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் அனுமதி கோரப்படுகிறது.

அனுமதி கிடைத்தவுடன் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பணிகளை துவக்குவது குறித்து அனுமதி கோரப்படும். இதனால் விரைவில் ஊட்டி மக்களுக்கு மூன்றாவது குடிநீர் திட்டம் உருவாக வாய்ப்புள்ளது.