Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருந்துறை 2வது குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் நிறைவு

Print PDF

தினமலர் 06.07.2010

பெருந்துறை 2வது குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் நிறைவு

பெருந்துறை:பெருந்துறை, .செ.பாளையம், சென்னிமலை இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.சுதந்திர தின பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சென்னிமலை டவுன் பஞ்சாயத்து மக்கள் தேவைக்கு இரண்டாவது கூட்டு குடிநீர்

திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்தது. திட்டச் செலவில் 332.25 லட்சம் ரூபாய் பெருந்துறை டவுன் பஞ்சாயத்து, 390.96 லட்சம் ரூபாய் கருமாண்டிசெல்லிபாளையம், 459.81 லட்சம் ரூபாய் சென்னிமலை டவுன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில் 60 சதவீதம் நகர்ப்புற வங்கியிலிருந்து கடனாகவும், 40 சதவீதம் மான்யமாகவும் வழங்கப்படுகிறது.கடந்த 1999-2000 ம் ஆண்டில் குடிநீர் குழாய் இணைப்புக்கான டேவணித் தொகையாக வீட்டு உபயோகத்துக்கு 6,000 ரூபாய், வணிகம் மற்றும் இதர உபயோகத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.பல கோடி ரூபாய் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாகியும் மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், "இத்திட்டம் 2009 மார்ச்சில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்' என்று, கூறியிருந்தார். "இதோ, அதோ' என்று, மாதங்கள், ஆண்டுகளாகி விட்டன. மக்களுக்கு குடிநீர் கிடைத்தபாடில்லை.

பெருந்துறை வக்கீல் சங்க தலைவர் மணியன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம், ஈரோடு மாவட்டம், நகர திட்டக் கோட்டம், தமிழ்நாடு குடி நீர் வாரிய, நிர்வாக பொறியாளருக்கு அனுப்பப்பட்டது. வக்கீல் மணியனுக்கு அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருந்ததாவது:

இத்திட்டத்தின்படி கடைக்கோடியில் அமைந்துள்ள, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதிக்கு, புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளில் நீரேற்றி, மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பஞ்சாயத்து பகுதிகளில் நான்கு மேல்நிலை குடிநீர் தொட்டிகளும், விடுபட்ட குழாய் இணைப்பு பணியும் விரைவாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிக்கப்பட்டு, திட்டம் ஃபிப்ரவரி இறுதிக்குள் முழு பயனுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மாதம் ஜூலையாகியும், திட்டம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த காலதாமதம் ஏன்? என்பதற்கு அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:சித்தோட்டில் நான்கு வழிச்சாலை பணி நடந்ததால், திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. நான்கு வழிச்சாலை பணி முழுமையடைந்த பிறகு, புதிய குழாய்கள் பதிக்க வேண்டிய இடங்களில் பதிக்கப்பட்டு, மேல்நிலை தொட்டிகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்நிலை தொட்டியிலிருந்து, விநியோக குழாய்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததன் மூலம், திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. புதிதாக தோன்றியுள்ள குடியிருப்பு பகுதிக்கு குழாய் பதிப்பது மட்டுமே பாக்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஈரோடு வருகை தரும் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை துவக்கி வைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சென்னிமலை டவுன் பஞ்சாயத்துக்கள் தொழில் மற்றும் கல்வி நகரமாக இருப்பதால், நாளுக்கு நாள் வெளியூரிலிருந்து மக்கள் வருவது அதிகரித்து வருகிறது. தொழில் வளர்ச்சியால் நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டது. ஆகவே, இரண்டாவது குடிநீர் திட்டம் மூலம் மட்டுமே மக்கள் குடிநீர் பெற முடியும். திட்டம் அறிவித்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மேலும் நாட்களை கடத்தாமல் மக்களுக்கு விரைவில் குடிநீர் கிடைக்க அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.