Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி 22.07.2010

தூத்துக்குடியில் ரூ. 50 லட்சத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

தூத்துக்குடி, ஜூலை 21: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பெ. கீதாஜீவன் (படம்) புதன்கிழமை திறந்து வைத்தார்.

வல்லநாடு மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்தேக்கத் தொட்டியைத் திறந்து வைத்து அமைச்சர் பேசியதாவது:

தூத்துக்குடி மாநகருக்கு, தூத்துக்குடியிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இம் மாநகருக்கு, இதுவரை 3 குடிநீர்த் திட்டங்கள் முறையே 1932, 1979, 2001 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி, தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து சுமார் 37.43 மீட்டர் உயரத்தில் உள்ளது.

எனவே, இந்த 7 கி.மீ. தொலைவுக்கு பிரதான குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இம் மலைப்பகுதியிலிருந்து, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நீர்த்தேக்க நிலையம் 34.18 மீட்டர் தாழ்வில் இருப்பதால், இந்த 28.62 கி.மீ. தொலைவுக்கு தன்னோட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு, தற்சமயம் நாளொன்றுக்கு 240 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டுவரப்பட்டு நகரின் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

முதல் மற்றும் இரண்டாவது செயல்படுத்தப்பட்ட திட்டங்களில், இம் மலைப்பகுதியில் நீர்தேக்கத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, பின்பு அவை தன்னோட்ட குழாய் வழியாக நகருக்கு கொண்டுவரப்பட்டது. தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்படும் மின்தடை காரணமாக அதிக அளவு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

அதன்பின், மூன்றாவது செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் பிரதான குழாய் எந்த நீர்தேக்கத் தொட்டியிலும் இணைப்பு ஏற்படுத்தாமல் நேரடியாக தன்னோட்ட குழாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாக சிறிய மின்தடை ஏற்பட்டாலும் நகருக்கு வரும் குடிநீரின் அளவு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அரசால் ஒருமுறை வழங்கப்படும் மானியத் திட்டத்தின் கீழ் வல்லநாடு மலைப்பகுதியில் ரூ. 50 லட்சம் செலவில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது என்றார் அமைச்சர். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபாலன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ப. காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.