Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பார்சன்ஸ்வேலி நீர்மட்டம் குறைந்தது ஊட்டியில் குடிநீர் பற்றாக்குறை அபாயம்

Print PDF

தினகரன் 22.07.2010

பார்சன்ஸ்வேலி நீர்மட்டம் குறைந்தது ஊட்டியில் குடிநீர் பற்றாக்குறை அபாயம்

ஊட்டி, ஜூலை 22: ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததாலும், மின் உற்பத்திக்காக அணையில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வருவதாலும் ஊட்டியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி நகராட்சி உட்பட்ட 36 வார்டு பகுதிக்கு பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோவர் அணைகள், கோடப்பமந்து அப்பர் மற்றும் லோவர் அணைகள், ஓல்டு ஊட்டி, கிளன்ராக் போன்ற அணைகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இதில் ஊட்டி நகர் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு குடிநீர் விநியோகம் முக்கிய ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை உள்ளது. இந்த அணை மின்வாரியத்திற்கு சொந்தமானது. அணை நீரை கொண்டு தான் குந்தா மின்வாரியம் நீர்மின் உற்பத்தியை மேற்கொள்கிறது.

நகராட்சி சார்பில் பார்சன்ஸ்வேலி அணையில் 2 ராட்சத மோட்டார்களை பொருத்தி நீர் வினியோக முறையை செயல்படுத்துகிறது. தற்போது இந்த அணையிலுள்ள நீரை மின்வாரியம் நீர் மின் உற்பத்திக்காக தினமும் எடுப்பதால் அணையின் நீர் இருப்பது வேகமாக குறைந்து வருகிறது.

56 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது சுமார் 22 அடி மட்டுமே நீர் உள்ளது. நீர் இருப்பு மேலும் குறைந்தால் அணையில் சேறும், சகதியுமே மிஞ்சும். இதனால் குடிநீருக்காக தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.

இம்முறை பார்சன்ஸ்வேலி மற்றும் போர்த்திமந்து நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. மின் உற்பத்திக்காக தினமும் குந்தா மின் வாரியம் அணையில் இருந்து நீரை எடுத்து வரும் நிலையில் அணையின் நீரின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்யவில்லையெனில் நகராட்சி சார்பில் ஊட்டி நகர் மக்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படும்