Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வி.கே.புரத்தில் குடிநீர் திட்ட பணிகள்

Print PDF

தினமலர் 26.07.2010

வி.கே.புரத்தில் குடிநீர் திட்ட பணிகள்

விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் வரும் 28,29,30 ஆகிய மூன்று நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தி வைக்கப்படும் என்று விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் காரையார் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு முதன் முதலாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் தான் தரையை தொடுகிறது. இந்நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளுக்கும் வீட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அப்போதைய விக்கிரமசிங்கபுரம் பஞ்., மூலம் நகரில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

காலப்போக்கில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பெருகி வந்த குடியிருப்புகளால் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளும் அதிக அளவில் கொடுக்க வேண்டிய நிலை நகராட்சிக்கு ஏற்பட்டது. அதே சமயத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு போதுமான அளவிற்கு தண்ணீர் கெடுக்க முடியாத நிலையும் நகராட்சிக்கு ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு தற்போதைய விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன் தொகுதி எம்.எல்..வும், சபாநாயகருமான ஆவுடையப்பனிடம் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை குறித்து விளக்கம் அளித்தார். இதன் அடிப்படையில் சபாநாயகர் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகளிடம் பேசி 2.56 கோடி ரூபாய் செலவில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிக்கான முதல்கட்ட வேலையை துவக்கி வைத்தார்.

இதனால் விக்கிரமசிங்கபுரம் தங்கம்மன் கோயில், இருதயக்குளம், அய்யனார்குளம், முதலியார்பட்டி, யானைபாறை, கொட்டங்குளம், பொதிகையடி போன்ற 7 இடங்களில் 5 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளும், இரண்டு தரை நீர்தேக்க தொட்டிகளும் கட்டப்பட்டு வந்தது. இதில் பெரும்பாலான பணிகள் பூர்த்தியாகிவிட்ட நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி இத்திட்டப் பணிகளை துவக்கி வைக்க அம்பாசமுத்திரம் நகருக்கு தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.

இதனால் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சியில் உள்ள நீர்நிலை தேக்க தொட்டிகளுக்கு பாபநாசம் பொதிகையடி நீரேற்றும் நிலையத்தில் இருந்துதான் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் பாபநாசம் பொதிகையடி நீரேற்றும் நிலையத்தில் குடிநீர் சப்ளை செய்யும் மெயின் குழாய்கள் பதிக்க வேண்டியது இருப்பதால் வரும் 28,29,30 ஆகிய மூன்று நாட்களுக்கு விக்கிரமசிங்கபுரம் நகருக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு விக்கிரமசிங்கபுரம் நகரில் உள்ள 21 வார்டுகளில் உள்ளவர்கள் குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து பயண்படுத்த வேண்டும் என விக்கிரமசிங்கபுரம் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.