Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூரில் ரூ.22 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி:

Print PDF

தினமலர் 27.07.2010

கடையநல்லூரில் ரூ.22 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி:

கடையநல்லூர்:கடையநல்லூரில் 22 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளின் மூலமாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் புதிதாக பெற்றிடவும், நகர மக்களுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்திடும் வகையிலும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.கடையநல்லூர் நகராட்சியில் பெரியாற்று படுகை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக நகர மக்களுக்கு தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரியாற்று படுகையின் மூலமாக பெறப்படும் குடிநீர் சப்ளையில் மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றிடும் வகையில் அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு நகராட்சி குடிநீர் வழங்கல் துறை மூலமாக இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதுடன் கடையநல்லூர் நகராட்சி மக்களுக்கு அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சீராகவும், முறையாகவும் கிடைத்திடும் வகையிலும் புதிதாக வாட்டர் டேங்குகள் அமைத்திடும் வகையிலும், நகராட்சியின் விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகையினை மையமாக கொண்டும் இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக 21.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் கோரிக்கையினை அடுத்தும், குடிநீர் மேம்பாட்டு பணிகளில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி தமிக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் கவனத்திற்கு தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் கொண்டு சென்றதை அடுத்தும் இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி மக்களுக்கு குடிநீர் சீராக கிடைத்திடும் வகையில் வரும் 2040ம் ஆண்டு வரை நகராட்சியின் வளர்ச்சியையும், மக்கள் தொகையையும் அடிப்படையாக கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.இந்நிலையில் இந்த புதிய குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கான துவக்க விழா அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. மத்திய அமைச்சர் வாசன் முன்னிலையில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்கிறார். குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை பொறுத்தவரை கடையநல்லூர் நகராட்சி பகுதியில் இக்பால்நகர், மாவடிக்கால், முத்துக்கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், பேட்டை, மேலக்கடையநல்லூர், இந்திராநகர் ஆகிய பகுதிகளில் புதிதாக வாட்டர் டேங்குகள் அமைக்கப்படுகின்றன.

பெரியாற்று படுகையிலிருந்து புதிதாக அனைத்து பகுதிகளிலும் குழாய் பதித்திடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் 11.5 கோடி ரூபாய் செலவிடப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் ஆற்றுப் படுகையினை ஒட்டி புதிய கிணறு, செக் டேம் போன்றவைகளும் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே கடையநல்லூர் நகராட்சியில் பெரியாற்று படுகையின் மூலமாக நாளொன்றிற்கு சுமார் 40 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக சுமார் 33 லட்சம் லிட்டர் தண்ணீரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளின் மூலமாக சுமார் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறும் வகையில் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன்படி கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் நாளொன்றிற்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதற்கான வழிவகையின் அடிப்படையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இப்பணிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்திட வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு ஓராண்டிற்குள் 22 கோடி ரூபாய் செலவிலான குடிநீர் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.