Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 169 கோடி குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதி செப்டம்பரில் செயல்படும்'

Print PDF

தினமணி 27.07.2010

ரூ. 169 கோடி குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதி செப்டம்பரில் செயல்படும்'

திருச்சி, ஜூலை 26: திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் ரூ. 169 கோடி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு. தமிழக முதல்வர் இதைத் தொடக்கிவைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

திருச்சி மாநகரில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், ரூ. 169 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் 8 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத் திட்டத்தில் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மூன்று இடங்களில் பிரதான நீர் சேகரிக்கும் கிணறுகள், 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 88.59 கிமீ தொலைவுக்கு பிரதான மற்றும் கிளை குடிநீர் உந்து குழாய்கள், 262.08 கிமீ தொலைவுக்கு குடிநீர் விநியோகக் குழாய் மற்றும் ஏற்கெனவே பதிக்கப்பட்டு பழுதடைந்துள்ள 446 கிமீ தொலைவுக்கான குழாயை மாற்றியமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளில் கொள்ளிடத்தில் 3-ம் கிணறு பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துள்ளது. இந்தக் கிணற்றை திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு. பின்னர் அவர் கூறியது:

அடுத்த 40 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையின் அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பணி முடிவடைந்துள்ள கொள்ளிடம் கிணறு எண்: 3-ல் இருந்து 5 கிமீ தொலைவுக்கு காவிரியாற்றின் வடகரை வரை பிரதான குடிநீரேற்றும் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் குழாயை காவிரியாற்றின் வடகரையிலிருந்து பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சேகரிக்கும் கிணறு வரை காவிரியாற்றின் குறுக்கே அரை கிலோமீட்டர் தொலைவுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் குழாய் பதித்து இணைக்கும் பணியும் நடைபெறுகிறது.

இதையடுத்து, பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் உள்ளடக்கிய கிராப்பட்டி, அன்புநகர், கல்லுக்குழி, காஜாமலை காமராஜ் நகர், அம்மன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தரராஜ் நகர், அரியமங்கலம் மலையப்ப நகர், ரயில்நகர், ஜெகநாதபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலக்கல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, சங்கிலியாண்டபுரம், விவேகானந்தாநகர் ஆகிய பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும்.

இந்த ஒரு பகுதி பணிகளை செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி திருச்சி வரும்போது தொடக்கிவைப்பார் என்றார் நேரு.

ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நிர்வாகப் பொறியாளர் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.