Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சீரான குடிநீர் விநியோகம் ரூ.169 கோடியில் திட்டம் செப்டம்பரில் முதல்வர் துவக்குகிறார்

Print PDF

தினகரன் 27.07.2010

சீரான குடிநீர் விநியோகம் ரூ.169 கோடியில் திட்டம் செப்டம்பரில் முதல்வர் துவக்குகிறார்

திருச்சி, ஜூலை 27: திருச்சியில் ரூ.169 கோடி செலவிலான குடிநீர் திட்டத்தை செப்டம்பரில் முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவன உதவி, மாநில அரசின் மான்யத் தொகை மற்றும் மாநகராட்சி பங்களிப்பு என ரூ.169 கோடியில் 8 தொகுப்புகளாக குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணியின் ஒரு கட்டமாக காவிரி ஆற்றில் கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறையில் நடந்து வரும் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் நேரு நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில், அடுத்த 40 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவை அடிப்படையில் ரூ.169 கோடியில் பணிகள் முழுவீச்சில் நடந்து வரு கிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான நீர் சேகரிக்கும் கிணறு எண். 3லிருந்து 5 கி.மீ. தூரத்திற்கு காவிரி ஆற்றின் வடகரை வரை பிரதான குடிநீரேற்றும் குழாய் பதிக்கப் பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றின் வடகரையிலிருந்து பொன்மலை கூட்டு குடிநீர் திட்ட நீர் சேகரிக்கும் கிணறு வரை காவிரி ஆற்றின் குறுக்கே அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு நவீன தொழில்நுட்பம் மூலம் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த குடிநீரை பொன்மலை, காமராஜ் நகர், அம்மன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தரராஜ் நகர், அரியமங்கலம், மலையப்பநகர், ரயில்நகர், ஜெகநாதபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, சங்கிலியாண்டபுரம், விவேகானந்தாநகர் பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சியில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகம், வெள்ளத் தடுப்பு பணி, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றை செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரால் துவக்கிவைக்கப்படவுள்ளது. அப்போது இந்த குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியும் துவக்கி வைக்கப்படும். இவ்வாறு நேரு கூறினார். மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.