Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மந்தம்

Print PDF

தினமணி 30.07.2010

ஈரோட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மந்தம்

ஈரோடு, ஜூலை 29: ஈரோடு மாவட்டத்தில் அரசு குடிநீர் திட்டப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது என, சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான பேரவை உறுதிமொழிக் குழு ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் நடைபெறும் மேம்பாலப் பணி, காளிங்கராயன் வாய்க்கால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இக்குழு ஆய்வு மேற்கொண்டது(படம்).

இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாவட்டத்தில் 135 திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதியளித்திருந்தது. இதில், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.217 கோடி மதிப்பிலான 31 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி சாராத 14 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.42.51 கோடி மதிப்பில் 19 பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு பரிசீலனையில் 60 பணிகள் உள்ளன. 11 பணிகளை நிறைவேற்ற இயலாது என்று அரசு அறிவித்துள்ளது.மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன.

இப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் பணிகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் அருகில் மேம்பாலம் கட்டுவதற்கு சில அமைப்புகள் தெரிவித்துள்ள எதிர்ப்பு, சிப்காட் பகுதியில் ஆலைக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகத்தின் தேவை, ஆவின் தீவன தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள நிர்வாக ரீதியான பிரச்னைகள் குறித்து குழு நேரில் ஆய்வு செய்துள்ளது.

இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை, இப்பிரச்னைகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. இப் பிரச்னைகள் குறித்த பரிந்துரைகளை அரசிடம் குழு அளிக்கும் என்றார். மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.குமாரவேல் பாண்டியன், எஸ்பி டி.ஜெயச்சந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.