Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குறைகிறது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

Print PDF

தினமலர் 05.08.2010

குறைகிறது செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

செம்பரம்பாக்கம் : பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் குறைகிறது. இருப்பினும், அடுத்து வருவது மழைக்காலம் என்பதால், குடிநீர் வினியோகத் தில் சிக்கல் ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம். ஏரி, 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவும், 24 அடி நீர்மட்டமும் கொண்டது. கடந்த கோடையில் 7 அடி என்ற அளவில் ஏரியின் நீர்மட்டம் கடுமையாக குறைந்தது. பின், கிருஷ்ணா நீர், பூண்டி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது.

கிருஷ்ணா நீர் வருகை மற்றும் கோடை மழையால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், ஜூன் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டுள்ளதாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும், விவசாயத்திற்கும் முழு அளவில் தண்ணீர் எடுக்கப்படுவதாலும், தற்போது ஏரியின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 15.47 அடியும், கொள்ளளவு 1,619 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரி களை கேட்டபோது, "ஆந்திரா வில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. அடுத்து வருவது மழைக்காலம் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது' என்றனர்.