Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டி தனி குடிநீர் திட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கக் கோரி ஸ்டாலினிடம் மனு

Print PDF

தினமணி 06.08.2010

கோவில்பட்டி தனி குடிநீர் திட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கக் கோரி ஸ்டாலினிடம் மனு

கோவில்பட்டி, ஆக. 5: கோவில்பட்டி நகருக்கு தனி குடிநீர் திட்டத்திற்கு ரூ. 80 கோடி நிதி ஒதுக்கக்கோரி தமிழக துணை முதல்வர் ஸ்டாலினிடம், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவி மல்லிகா வியாழக்கிழமை மனு அளித்தார்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஸ்டாலினிடம் அவர் அளித்த மனு:

கோவில்பட்டி நகராட்சியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த குடிநீர்த் திட்டத்தின்கீழ், 27 வழியோரக் கிராமங்களான கயத்தாறு, கழுகுமலை, எட்டையபுரம் பேரூராட்சிகளும், சாத்தூர் நகராட்சியும் பயனடைந்து வந்தது.

தற்போது, கோவில்பட்டி நகராட்சியைத் தவிர மற்ற பகுதிகளுக்கு தனியாக குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் முடிந்துவிட்டதால், தலைமை பணியிடமான சீவலப்பேரியிலிருந்து கோவில்பட்டி வரையுள்ள நீருந்து, குழாய்கள் மிகவும் பழுதடைந்திருப்பதால், அதிகபட்ச குடிநீரை செலுத்த முடியாத நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கோவில்பட்டி நகராட்சியின் உச்சகட்ட கால (2036-ம் ஆண்டு) மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வழங்கும் வகையில், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து சீவலப்பேரி- சவலாப்பேரி- புளியம்பட்டி- நாரைக்கிணறு-கொல்லங்கிணறு-கடம்பூர்-குருமலை- மந்தித்தோப்பு வழியாக கோவில்பட்டி நகரம் வரை புதிய குடிநீர் குழாய் அமைக்கவும்,

தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்கெனவே உள்ள நீர் உறிஞ்சி கிணறுகளுடன் கூடுதலாக 2 கிணறுகள் அமைத்து, 12,454 மில்லியன் லிட்டர் குடி தண்ணீர் கோவில்பட்டி நகருக்கு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

தாங்கள் சட்டப்பேரவையில் 2010- 2011 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கோவில்பட்டி நகருக்கு தனி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளீர்கள்.

தற்போது, மேற்படி திட்டத்தை செயலாக்கும் திட்ட மதிப்பீடு ரூ. 79.89 கோடியில் தயாரிக்கப்பட்டு, டுபிட்கோ நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது.

இந்த திட்டத்திற்கான நிதியினை விடுவித்து, கோவில்பட்டி நகருக்கு புதிய குடிநீர் திட்டத்தினை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

நகராட்சி ஆணையாளர் விஜயராகவன், பொறியாளர் சையது அகமது ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கக்கோரியும் ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.