Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆக.,11ல் துவக்கம்

Print PDF

தினமலர் 10.08.2010

கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆக.,11ல் துவக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சியில், 283 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் தனிக்கூட்டு குடிநீர் திட்ட பணிகளை வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் துவக்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்களது குடிநீர் தேவையை தீர்க்கும் பொருட்டு மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு 10 நாள், 15 நாளுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்களுக்கும் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுவதால் மாநகராட்சி மக்களுக்கு தண்ணீர் தேவை பெரும் பிரச்னையாக உள்ளது. அதனால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மொத்தம் 283 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனிக்கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அடிக்கல் நாட்டி சென்றார். ஆனால், டெண்டர் எடுப்பதில் இழுபறி நிலை நீடித்தது. தற்போது பணிகளை நிறைவேற்ற ஐந்து ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகள் முடிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் இப்பணிகள் குறித்து கேட்டபோது, ""வரும் 11ம் தேதி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான பணிகளை நான் துவக்கி வைக்கலாமா என்ற யோசனையில் உள்ளேன். முதல்வர் ஏற்கனவே அடிக்கல் நாட்டி விட்டதால் இப்பணிகளை செய்யலாமா அல்லது அவர் வருகையின்போது நடத்திக் கொள்ளலாமா என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது."இத்திட்டம் இரண்டு ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும். அதன் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் கிடைக்கும். ஒரு நபருக்கு தினமும் 130 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கி நடந்து வருவதால், அடுத்த கட்டமாக குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்ற ஐந்து ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது."சேலம் நகருக்குள் பால வேலைப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. லேபர் பிரச்னை, கால்வாய் செல்வது போன்றவற்றால் சற்று தாமதமாகியிருக்கலாம். விரைவில் முடிக்கப்படும்,'' என்றார்.