Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பணி தீவிரம்

Print PDF

தினமலர் 13.08.2010

திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பணி தீவிரம்

உடுமலை: மூன்று ஒன்றியங்கள், நான்கு பேரூராட்சிகள் உட்பட 112 குடியிருப்புகள் பயன்பெறும் புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்று, தளி கால்வாயிலிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. செப்.,15க்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் சங்கராமநல்லூர், மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் பேரூராட்சிகளுக்குட்பட்ட 112 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில், புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு 27.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. திருமூர்த்தி அணை - தளி கால்வாயில் தினமும் 13.81 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, முழு அளவிலான சுத்திகரிப்பு செய்யப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு; 2009 மார்ச் மாதம் பணி துவங்கியது. இத்திட்டத்தின் கீழ், தளி கால்வாயில் கிணறு மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள், திருமூர்த்தி அணை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில், முழு அளவிலான சுத்திகரிப்பு நிலையம், பம்பிங் ஸ்டேஷன், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் ஆகியவை கட்டும் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்தன.

மேலும், குடிநீர் வினியோகத்திற்கு 39 கிலோ மீட்டர் நீள பிரதான குழாய்கள் மற்றும் 126 கிலோ மீட்டர் தூரம் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. தற்போது, திட்டத்தின் இறுதியிலுள்ள மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு சில கிராமங்களில் மட்டும் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணிகள் மீதம் உள்ளது.குடிநீர் திட்டத்தின் பெரும்பாலான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இயந்திரங்கள், மின் உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்பு உபகரணங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. திட்டத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திட்டத்தின் முதல் சோதனை பணி நேற்று நடந்தது. தளி கால்வாயிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. நீர் உந்து நிலையத்திலிருந்து, நீர் எடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு மோட்டார்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

அதிகாரிகள் கூறியதாவது: குடிநீர் திட்டத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சுத்திகரிப்பு நிலையத்தில் மின் உபகரணங்கள், குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தும் பணியும், திட்டத்தின் கடைக்கோடியிலுள்ள கிராமங்களுக்கு பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. நேற்று, முதல் கட்டமாக தளி கால்வாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் நீர் உந்து நிலையத்திலுள்ள மோட்டார்கள் இயக்கப்பட்டு, தளி கால்வாயில் தண்ணீர் எடுக்கப்பட்டு, அமைக்கபட்டுள்ள திட்ட குழாய்கள் வழியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நீர் கசிவு உட்பட எந்த பிரச்னையும் இல்லாமல் நீர் வந்து சேர்ந்தது. மீதம் உள்ள பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, செப்டம்பர் 15ம் தேதி குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது என்றனர்.