Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சிக்கு ரூ.25 கோடி குடிநீர் திட்டம் நிர்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவு

Print PDF

தினகரன் 17.08.2010

கரூர் நகராட்சிக்கு ரூ.25 கோடி குடிநீர் திட்டம் நிர்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவு

கரூர், ஆக. 17: ரூ.25 கோடி மதிப்பிலான கரூர் நகராட்சி குடிநீர் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த பணிகளை மேற் கொள்ள உள்ளது. திட்டம் நிறைவேற்றப்பட்டால் கரூர் மக்களின் குடிநீர் தேவை தீரும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரூர் நகராட்சியில் காவிரி குடிநீர் திட்டம் கடந்த 13 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி கூடுதல் குடிநீர் விநியோகத் திட்டப்பணியின் மூலம் ரூ.1.34 கோடியில் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர் பற்றாக்குறை, பெருகிவரும் மக்கள்தொகையை கருத்தில்கொண்டு குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. கரூர் அருகே உள்ள நெரூரில் இருந்து கரூர் நகரம் வரை கூடுதல் குடிநீர் அபிவிருத்தி திட்டம் நடைபெற சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இதுதொடர்பாக குடிநீர் ஆதாரங்கள், இன்னும் 25 ஆண்டுகளில் பெருகும் மக்கள்தொகை ஆகியவை கணக்கிடப்பட்டு திட்ட அறிக்கை நகராட்சியால் தயார் செய்யப்பட்டது. நகராட்சி கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்காக திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை பரிசீலனை செய்த தமிழக அரசு, தற்போது இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. அர்பன் லோகல்பாடி, நகராட்சி, பொதுமக்கள் பங்குத்தொகை ரூ.2.47 கோடி, தமிழ்நாடு அர்பன் டெவலப்மென்ட் பண்ட் (டிஎன்யுடிஎப்) ரூ.14.80 கோடி, மானியம் ரூ.7.40 கோடி மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த நிதி முறையே 10 சதவீதம், 60 சதவீதம், 30 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. குடிநீர் விநியோக அபிவிருத்தி திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கரூர் நகரின் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேறிவிடும் என்று கரூர் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.