Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலப்பாளையத்தில் ஒரு குடம் குடிநீர் ரூ.​ 10

Print PDF

தினமணி 18.08.2010

மேலப்பாளையத்தில் ஒரு குடம் குடிநீர் ரூ.​ 10

திருநெல்வேலி,ஆக.17:​ ​ ​ மேலப்பாளையத்தில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னையால்,​​ மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.​ 10 கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

​ வற்றாத ஜீவ நதியாகக் கருதப்படும் தாமிரபரணி இம் மாநகருக்கு நடுவே சென்றும்,​​ இங்கு குடிநீர்ப் பிரச்னை ​ இருந்து கொண்டுதான் இருக்கிறது.​ அதைத் தீர்க்க மாநகராட்சி அதிக அக்கறை எடுக்காததால்,​​ கோடைக்காலம் மட்டுமன்றி எப்போதும் குடிநீர் பிரச்னை உள்ளது.

​ ​ இம் மாநகருக்கு கொண்டாநகரம்,​​ நாரணம்மாள்புரம்,​​ குறுக்குத்துறை,​​ மணப்படைவீடு,​​ பொட்டல் ஆகிய பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு,​​ குடிநீர் கொண்டு வரப்படுகிறது.​ அந்த நீரைச் சேமித்துவைக்க மட்டும் 62 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன.​ இவற்றில் 1 கோடியே 92 லட்சம் லிட்டர் நீரைச் சேமிக்க முடியும்.

சுமார் 5.5 லட்சம் மக்கள்தொகையும்,​​ வீட்டுக் குடிநீர் இணைப்பு மட்டும் 49,734-ம் கொண்ட இம் மாநகருக்கு,​​ இந்தக் குடிநீர் போதுமானதல்ல.​ ஒரு நாளைக்கு மாநகருக்கு குறைந்தபட்சம் ஐந்தரை கோடி லிட்டர் தண்ணீர் தேவை.​ ஆனால் மொத்தமே 1.92 கோடி லிட்டரை விநியோகிக்கக் கூடியளவுக்குத்தான் கட்டமைப்புகள் உள்ளன.

​ ​ குடிநீர் விநியோகத்துக்கு 349 கி.மீ.​ தொலைவுக்கு பகிர்மானக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.​ இவற்றில் பெரும்பான்மையானவை பதிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.​ இதனால் குழாய்களில் பல இடங்களில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.​ மேலும் மாதத்துக்கு குறைந்தது 4 முறைகளாவது குடிநீர்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு,​​ பல நாள்கள் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.

​ மாநகரில் 70 சதவிகித குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதாகக் கூறிக் கொள்ளும் மாநகராட்சி,​​ எந்தப் பகுதிக்கும் சீராக குடிநீர் விநியோகிப்பதாகத் தெரியவில்லை.​ 4 மண்டலங்களிலும் மேலப்பாளையம் மண்டலத்தில்தான் குடிநீர்ப் பிரச்னை அண்மைக்காலமாக அதிகமாக ஏற்பட்டு வருகிறது.

​ அதிக மக்கள்தொகையும்,​​ அதிக மக்கள் செரிவும் கொண்ட இம் மண்டலத்தில் குடிநீருக்காக சாலை மறியல்,​​ ஆர்ப்பாட்டம் என மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.​ ஆனால் மாநகராட்சி அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

​ குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ரூ. 55 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறக்கப்பட்டது.​ இதேபோல மிகவும் பழைய குழாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் ரூ.​ 28 லட்சத்தில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன.​ இத் திட்டம் எப் பகுதியிலும் முழு அளவில் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

​ ​ இதனால் மக்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயன் கிடைக்குமா என்பது சந்தேகமே.​ குறிப்பாக 30-வது வார்டில் குறிச்சி பகுதியில் பழைய குடிநீர்க் குழாய் எடுக்கப்பட்டு,​​ புதிய குடிநீர்க் குழாய் பதிக்கப்பட்டது.​ இப் பகுதியில் ஏற்கெனவே குழாய் இருந்த பகுதிகளில் புதிதாக குழாய் பதிக்கப்படாமல்,​​ புதிதாக அமைக்கப்பட்டு வரும் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீர்க் குழாய் பதிக்கப்பட்டது.​ இதற்கு ஆரம்பம் முதலே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

​ மேலும் குறிச்சி கிழக்குப் பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.​ சீராக குடிநீர் விநியோகிப்பதாக புதிதாக குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டன.​ இதில் பல பகுதிகள் விடுபட்டுள்ளன.​ அப் பகுதி மக்கள் புகார் செய்தும்,​​ அதை இணைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.​ ​

​ ​ தற்போது அப் பகுதி மக்கள்,​​ ஆட்டோக்கள் மூலம் குடங்களில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.​ இதில் ஆட்டோவுக்கு ஒரு குடத்துக்கு ரூ.​ 10 கொடுப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

​ ​ தாமிரபரணி கரையில் இருந்து கொண்டே குடம் குடிநீர் ரூ.10 கொடுத்து வாங்குவது மாநகராட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.​ இதே நிலைதான் மேலப்பாளையம் மண்டலம் முழுவதும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

​ இப் பிரச்னையை மாநகராட்சி உடனடியாக தீர்க்காவிட்டால்,​​ போராட்டம் இன்னும் தீவிரமடையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.​ எனவே,​​ இனிமேலாவது ​ விடுபட்டுள்ள பகுதிக்கு குடிநீர்க் குழாய் இணைப்பும்,​​ பழைய குழாய் இருக்கும் பகுதிக்கு புதிதாக குடிநீர்க் குழாய் பதித்தும்,​​ அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

திசைமாறிச் செல்லும் தண்ணீர்?​​

​ பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டுதான் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.​ ஆனால் திருநெல்வேலியில் அண்மைக்காலமாக இது மாறி வருகிறது.​ யாரேனும் ஒரு அரசியல் பிரமுகரையோ,​​ மக்கள் நலனைத் தவிர்த்து வேறு ஏதேனும் பிரதிபலனை எதிர்பார்த்தோ திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

​ அண்மையில் மேலப்பாளையம் மண்டலத்தில் சில வார்டுகளில் பழைய குடிநீர்க் குழாய் எடுக்கப்பட்டு,​​ புதிய குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டன.​ இதில் 30-வது வார்டு பகுதியான குறிச்சி சாந்தமூர்த்தி தெரு,​​ குறுக்குத்தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் பழைய குழாய்கள் இருந்த இடங்களில் புதிய குழாய்கள் பதிக்கப்படவில்லை.

​ ஆனால் குடிநீர்க் குழாய் இணைப்பு இல்லாத பகுதியான அக்ரஹார தெரு பகுதிக்கு புதிதாக குடிநீர்க் குழாய் பதிக்கப்பட்டு,​​ புதிதாக அமைந்துவரும் ஒரு குடியிருப்புக்கு எளிதாக இணைப்புகளைக் கொண்டு செல்லும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளனவாம்.​ அப் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி,​​ குடிநீர்க் குழாய் அமைத்திருப்பதாக அப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.​ இது அம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.