Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தில் செப்., முதல் குடிநீர் வினியோகம் : அமைச்சர் சாமிநாதன்

Print PDF

தினமலர் 19.08.2010

திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தில் செப்., முதல் குடிநீர் வினியோகம் : அமைச்சர் சாமிநாதன்

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள், நான்கு பேரூராட்சிகள் உட்பட 194 குடியிருப்புகள் பயன்பெறும் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தை செப்டம்பர் மாதம் துணை முதல்வர் துவக்கி வைக்க உள்ளதாக, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆறு கிராமங்களில் நேற்று இலவச கலர் "டிவி'க்கள் வழங்கும் விழா நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது : "உடுமலை ஒன்றியத்தில் கடந்த ஆட்சியில், ஐந்தாண்டுகளில் 17 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட்டிருந்தது. ஆனால், தி.மு.., ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 46 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்கள் மற்றும் நான்கு ஊராட்சிகள் என 192 குடியிருப்புகள் பயன்பெறும் புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம் 32 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.

பி..பி., திட்டத்தின் கீழ், தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாய் திட்டத்தின் ஆதாரமாக உள்ளது. இதில் நீர் கசிவு காரணமாக விரயமாவதோடு, அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், உடனடியாக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக திட்ட நிதி 160 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இப்பணியும் விரைவில் துவங்கும்.

ஒரு ரூபாய் அரிசி, விவசாய கடன் தள்ளுபடி, மருத்துவ காப்பீடு, இலவச "டிவி', சமையல் காஸ், திருமண உதவி தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, நல வாரியங்கள், முதியோர் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா , வீடு கட்டும் திட்டம், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.' இவ்வாறு பேசினார்.

ஏற்கனவே முதல் கட்டமாக இலவச "டிவி'க்கள் வழங்கிய நிலையில், விடுபட்டவர்களுக்கு "டிவி'க்கள் வழங்கப்பட்டன. சின்னக்குமாரபாளையத்தில் 135 "டிவி'க்களும், குருவப்பநாயக்கனூரில் 127, பள்ளபாளையத்தில் 385, செல்லப்பம்பாளையத்தில் 394, வாளவாடியில் 448, குரல்குட்டையில் 672 என மொத்தம் நேற்று 2161 "டிவி'க்கள் வழங்கப்பட்டன. சின்னக்குமாரபாளையத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இதில், நகராட்சி தலைவர் வேலுசாமி, வருவாய் கோட்டாட்சியர் சோமசேகரன், தாசில்தார் சபாபதி, தி.மு.., ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உட்பட ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 19 August 2010 08:34