Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் வினியோகம் தொடக்கம்

Print PDF

தினமலர் 24.08.2010

சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர் வினியோகம் தொடக்கம்

சென்னை:மீஞ்சூரில் நடைமுறைக்கு வந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் தூய்மை குறித்த ஆய்வுப் பணிகள் முடிந்து, ஒரு வாரமாக சென்னை, புறநகர் பகுதிகளிலும் வினியோகம் நடந்து வருகிறது.சென்னையில் நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டதால், மக்கள் "மெட்ரோ' குடிநீரைத்தான் நம்பியுள்ளனர். ஆனால், கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதை கருத்தில் கொண்டு, மீஞ்சூரில் 600 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஜூலை 31ல், முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

மீஞ்சூரிலிருந்து மணலி, மாதவரம், செங்குன்றம் வரையில் அமைக்கப்பட்ட 37 கி.மீ., குழாய்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது. மீஞ்சூரிலிருந்து கிடைக்கும் குடிநீரின் தன்மையும், பம்பிங் ஸ்டேஷன்களில் வந்து சேரும் குடிநீரின் தன்மையும் பரிசோதனை செய்யப்பட்டது.தூய்மைப் பரிசோதனை முடிந்து, கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது.தினமும் கிடைக்கும் 10 கோடி லிட்டரில் மணலிக்கு வந்து சேரும் 1.5 கோடி லிட்டர் மணலி, திருவொற்றியூர், எண்ணூர் நகராட்சி பகுதிகளுக்கும், மாதவரத்திற்கு வந்து சேரும் மூன்று கோடி லிட்டர், வடசென்னை பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.

செங்குன்றம் பம்பிங் ஸ்டேஷனுக்கு தினமும் 5.5 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் வருகிறது. இங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,"பலகட்ட நெம்மேலியில் துவக்கப்பட உள்ள, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம், மேலும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பதால், சென்னையின் குடிநீர் தேவை பெருமளவு நிறைவடையும்' என்றனர்.