Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 10 கிராம பஞ்.சிற்கு, குடிநீர் வழங்க ஆய்வு பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 24.08.2010

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 10 கிராம பஞ்.சிற்கு, குடிநீர் வழங்க ஆய்வு பணிகள் துவக்கம்

.தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட 10 கிராம பஞ்சாயத்துக்களுக்கு மாநகராட்சி குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான ஆய்வு பணி துவங்கியுள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடத்தில் நேற்று முதல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

கூட்டம் துவங்கும் முன்பாக அவர் பேசியதாவது; புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மாநகராட்சியில் நடக்கும் முதல் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கு கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பக்கிள் ஓடை சீரமைப்பு என்பது அய்யாச்சாமி எம். எல்.ஏவாக இருந்த போதே வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அவை நடக்கவில்லை. திமுக ஆட்சியில் பக்கிள் ஓடை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்ட பணிகள் நிறைவு பெற்று, இரண்டாம் கட்ட பணிகள் துவங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் நகரின் சுகாதார பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுள்ளது.

இதே போல் பாதாள சாக்கடை திட்ட வேலைகளும் விரைவாக நடந்து வருகிறது. பாதாளசாக்கடை திட்ட பணிகள் நடப்பதால் நகரில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடுகளை சீரமைக்க தமிழக முதல்வர் 10 கோடி ரூபாய் அனுமதியளிக்க உள்ளார். இந்த பணம் மிக விரைவில் வர உள்ளது. அதன் பிறகு ரோடு போடும் பணி துவங்கும். இதே போல் தூத்துக்குடி 1ம் கேட், 2ம் கேட்டில் போக்குவரத்து நெருக்கடி தீர்வதற்காகவும், மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இரண்டு இடத்திலும் சுரங்கப்பாதை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் அங்கு சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் தேர்தல் காலத்தில் நான் மக்கள் மத்தியில் வைத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டன.

தூத்துக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள 10 கிராம பஞ்சாயத்துக்களுக்கு மாநகராட்சி குடிநீர் வழங்குவதற்கான ஆய்வு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு தான் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.