Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீவி.,யில் தண்ணீருக்கு மக்கள் தவிப்பு : கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

Print PDF

தினமலர் 25.08.2010

ஸ்ரீவி.,யில் தண்ணீருக்கு மக்கள் தவிப்பு : கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : குடிநீர் பிரச்சனையை பற்றி கண்டு கொள்ளாத ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தால் மக்கள் தண்ணீருக்கு தவியாய் தவித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டாக சரி வர மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போர்வெல்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் புழங்குவதற்கு கூட ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு செண்பக தோப்பு பேயனாற்று படுகையில் கிணறு, போர்வெல்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.தற்போது செண்பகதோப்பு பேயனாறு வறண்டு காணப்படுவதால் இப்பகுதி போர்வெல், கிணறுகளில் ஒரு சிலவற்றில் மட்டுமே தண்ணீர் இருந்து வருகிறது.

இதன் மூலம் 24 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைத்து வருவதால் கடந்த இரண்டு மாதமாக நகராட்சி நிர்வாகம் பத்து நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வந்தது. தற்போது நேற்று முன் தினம் வரவேண்டிய பகுதிகளுக்கு நேற்று குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இதன் மூலம் குடிநீர் வழங்கும் நாள்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே நகராட்சி சார்பில் குடிநீர் கிணறுகளில் மின்சப்ளை இல்லாத நேரத்தில் மோட்டார்கள் ஓடுவதற்கு வசதியாக பல லட்சம் செலவில் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர்கள் இன்று வரை ஓட வில்லை. இதனால் அரசு பணம் வீணாவதோடு மக்களும் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்க லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யாமல் அதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை என்று கூறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தண்ணீர் பிரச்சனையில் தலையிட்டு லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யவும், மழை வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக தேவையான போர்வெல்களை போட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.