Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பரமக்குடி நகராட்சியில் கூடுதலாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்:ஆணையர்

Print PDF

தினமணி 27.08.2010

பரமக்குடி நகராட்சியில் கூடுதலாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்:ஆணையர்

பரமக்குடி,ஆக.26: பரமக்குடி நகராட்சிப் பகுதியில் கூடுதலாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக ஆணையர் கே.அட்சயா புதன்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியது:

நகராட்சிப் பகுதியில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் காவிரி ஆற்று குடிநீர் 12.6.2009 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மேலும் 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

குடிநீர் இணைப்புப் பெற விரும்புவோர் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக டெபாசிட் தொகை செலுத்தி ஒரு வார காலத்துக்குள் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.

இதில் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்கள் ரூ. 7 ஆயிரமும், குடியிருப்பு அல்லாத வணிக உபயோகத்துக்கு ரூ. 15 ஆயிரமும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

இதில் சாலை சீரமைப்புப்பணிக்காக கருங்கல் ஜல்லி சாலைக்கு ரூ. 2261-ம், தார்சா லைக்கு ரூ. 3641-ம், சிமெண்ட் சாலைக்கு ரூ. 4259-ம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப் படும். சாலையின் தூரத்துக்கு தகுந்தபடி சாலை சீரமைப்புக் கட்டணம் மாறுபடும். குடியிருப்போர் தங்களின் வீடுகளுக்கு தாங்களே பிளம்பர்களைக் கொண்டு தங்கள் கட்டடங்களின் உள் குழாய் வேலைகளை செய்தபின் அலுவலகத்தில் தெரிவித்த ஏழு நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்படும். இதில் இடைத்தரகர்களை அணுகாமல் நகராட்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

ஏற்கெனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்களது இணைப்புக்கு தற்போது திருத்தம் செய்து உயர்வு செய்யப்பட்ட டெபாசிட் தொகையின்படி வித்தியாசப்படும் தொகையினை மூன்று மாதத்துக்குள் மொத்தமாகவோ தவணை முறையிலோ செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார்