Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தென்மேற்கு பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது

Print PDF

மாலை மலர் 27.08.2010

தென்மேற்கு பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது

சென்னை, ஆக. 27- சென்னையில் மழை நீர் சேகரிப்பை அதிகப்படுத்த தற்போது விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் பயனாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் பூமி குளிரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு பொதுவாக தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவமழை சீசனில்தான் அதிக மழை கிடைக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். தென் மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

இந்த சீசனில் பொதுவாக சென்னையில் சுமாரான மழை அளவு கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை சீசனில் சென்னையில் ஓரளவு மழை பெய்தது. சமீப காலமாக மழை அளவு அதிகரித்தது.

தொடர்ச்சியாக பெய்த நல்ல மழை காரணமாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் திருப்தி அடையும் வகையில் உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஜூன் மாதம் நிலத்தடி நீர்மட்டம் அளவு 3.5 மீட்டராக இருந்தது. கடந்த மாதத்தில் இருந்து பெய்த மழை காரணமாக சென்னையில் சராசரியாக 0.2 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதை மேலும் அதிகரிக்க செய்ய சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மழை நீர் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை அவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். அடுத்த மாதம் 17-ந்தேதி இந்த பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டப்படி பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தால் சென்னையில் மழைநீர் சேகரிப்பை 100 சதவீதம் வெற்றியாக்கலாம். அனைத்துக்கட்டிடங்களிலும் முறையான மழைநீர் சேகரிப்பு செய்யும்பட்சத்தில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இப்போதே கட்டமைப்புகளை சீரமைப்பதால் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் வட கிழக்கு பருவமழை சீசனில் கூடுதல் மழை நீர் சேகரிப்பை பெற முடியும். இதற்கிடையே புறநகரில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது பூண்டி ஏரியில் 1,225 கனஅடி, சோழவரம் ஏரியில் 261 கனஅடி, செங்குன்றம் ஏரியில் 1,452 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 1,759 கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே சீசனில் இந்த ஏரிகளில் மிகக் குறைவான தண்ணீரே இருந்தது.

கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் சென்னை, மற்றும் புறநகர் களில் 20 சதவீதம் அளவுக்கு கூடுதல் மழை கிடைத்துள்ளது. இதனால்தான் சென்னை குடிநீர் ஏரிகளில் திருப்திகரமான அளவுக்கு தண்ணீர் இருப்பு கிடைத்துள்ளது.